‘இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழகத்திலிருந்தே தொடங்க வேண்டும்’ - முதல்வர் ஸ்டாலின் உறுதி!

‘இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழகத்திலிருந்தே தொடங்க வேண்டும்’ - முதல்வர் ஸ்டாலின் உறுதி!

வட அமெரிக்க தழிழ்சங்க பேரவை விழாவில் காணொலியின் மூலம் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தமிழ் மொழி எல்லோரையும் வாழ வைக்கும் எனவும், வாழ வைத்துக் கொண்டிருக்கிறது எனவும் கூறினார்.

வட அமெரிக்க தமிழ்சங்க பேரவை தொடக்க விழாவில் காணொலி காட்சி மூலம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘’கணிக்க முடியாத தொன்மையான வரலாற்றை கொண்டதாக தமிழும், தமிழ் இனமும் உள்ளது. படிப்பறிவு, எழுத்தறிவு பெற்ற மேம்பட்ட சமூகமாக தமிழ் சமூகம் உள்ளது. இதற்கு சான்றாக கீழடி அகழாய்வு முடிவுகள் உள்ளன.

நாட்டிலேயே அதிக கல்வெட்டுகளை கொண்டதாக தமிழகம் திகழ்கிறது. அதிலும் மதுரையை சுற்றியுள்ள வைகை ஆறு, கீழடி பகுதிகளில் அதிக கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. கரும்பொருநை பகுதியான தாமிரபரணி பகுதிகளில் கிடைத்த ஆய்வுகள் மூலம் 3100 ஆண்டுகளுக்கு முந்தைய சமூகமாக தமிழ் சமூகம் இருந்துள்ளது.

சிவகிரியில் நடந்த ஆய்வுகளின் மூலம் செங்கல் வடிகால் அமைப்பின் மூலம் நல்ல தண்ணீர் எடுத்து சென்றது தெரிய வந்துள்ளது. மயிலாடும்பாறை பகுதியில் கண்டறிந்த ஆய்வு மூலம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே இரும்பை பயன்படுத்திய சமூகமாக தமிழ் சமூகம் இருந்தது தெரியவந்துள்ளது. இத்தகைய ஆய்வுகளின் முடிவின் மூலம் தமிழரின் வரலாறு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்நிலையில் இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழகத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும்.

இதனை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் தொல்லியல் ஆய்வுகளுக்கு தமிழக அரசு ஊக்கமளித்து வருகிறது. கொந்தகை, அகரம், மயிலாடும்பாறை, துலுக்கப்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ் மொழியாக மட்டுமின்றி உயிராக, அமுதாக, மணமாக இருக்கிறது. தமிழ் மொழி எப்போதும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. எப்போதும் வாழ வைக்கும்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in