`எளியவருக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரத்தின் மீதான கோபம்'- எழுத்தாளர் ஜெயமோகனுக்கு தமிழ் சங்கம் கண்டனம்

எழுத்தாளர் ஜெயமோகன்
எழுத்தாளர் ஜெயமோகன்

சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது இளம் படைப்பாளி ப.காளிமுத்துவுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக எழுத்தாளர் ஜெயமோகன் தன் கண்டனத்தை சமூகவலைதளங்களின் வழியே வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வடசென்னை தமிழ் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சாகித்ய அகாடமி நிறுவனமானது 35 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளுக்கு யுவ புரஸ்கார் விருதினை வழங்கி வருகிறது. கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என ஏதாவது ஒரு தளத்தில், ஒவ்வொரு பிராந்திய மொழிக்கும் ஒரு விருது வழங்கப்படும். இதன் பரிசுத்தொகை 50 ஆயிரம் ரூபாய். மத்திய அரசின், சாகித்ய அகாடமி நிறுவனம் வழங்கும் விருது என்பதால் இது மிகவும் உயரிய விருதாகப் பார்க்கப்படுகிறது.

நேற்று அறிவிக்கப்பட்ட யுவ புரஸ்கார் விருது `தனித்திருக்கும் அரளிகளின் மதியம்' என்னும் ப.காளிமுத்து எழுதிய கவிதை நூலுக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் தன் முகநூல் பக்கத்தில், “இந்த இளைஞர் இவ்விருதால் ஓர் அவமதிப்பையே அடைந்துள்ளார். இதை அவருக்கு அளித்தவர்கள் அவரை சிறுமை செய்கிறார்கள். அவர் தன் எழுத்து பற்றிய போலியான நம்பிக்கை கொள்ளச் செய்கிறார்கள். அவர் இலக்கியம் கற்று, தன்னை உணர்ந்து, எழுதுவதை நிரந்தரமாக தடை செய்கிறார்கள்.

தங்களுடைய ஏதோ சுயநலத்தின்பொருட்டு அவரை பலியிடுகிறார்கள். அந்த இளைஞர் இன்னும் ஐந்தாண்டுகளில் ஒருவேளை இலக்கிய அறிமுகம் அடையக்கூடும். நல்ல கவிதைகளும் எழுதக்கூடும். ஆனால் இனி அவர் மேல் அவநம்பிக்கையே சூழலில் நிலவும். அவரை வாசிக்க மாட்டார்கள். கூர்ந்து வாசிக்கப்படவில்லை என்றால் கவிதை தொடர்புறுத்துதலை இழக்கும் என்பதனால் அவருக்கு முழுமையான புறக்கணிப்பே எஞ்சும்” என குற்றச்சாட்டை எழுதியிருந்தார். அதுகுறித்து காமதேனு இணையதளத்தில் விரிவாகவே எழுதியிருந்தோம். இந்நிலையில் இதற்கு வடசென்னை தமிழ் சங்கம், எழுத்தாளர் ஜெயமோகனுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

வடசென்னை தமிழ் சங்கத்தின் தலைவர் இளங்கோவிடம் காமதேனு இணையத்திற்காகப் பேசினோம். “அப்பட்டமான தவறான பார்வை ஜெயமோகனுடையது. சாகித்ய அகாடமி நிறுவனம் மூவர்குழுவை அமைக்கிறது. அவர்கள்தான் விருதாளரை தேர்வுசெய்கிறார்கள். முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது ஒரு சர்ச்சையை எழுப்புகிறார். கவிதை என்றால் என்ன என காளிமுத்து தெரிந்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே வந்தக் கவிதைகளை படிக்கவேண்டும் என்றெல்லாம் சுட்டுகிறார். சாகித்ய அகாடமி நிறுவனமே தேர்ந்தவர்களைத்தான் நடுவர் குழுவில் நியமிக்கிறது. தேர்வு குறித்த புரிதல் இல்லாமல், தேர்வுக்குழுவையும் மட்டரகமாகப் பேசியுள்ளார். அவர் ஒருவகையில் சிற்பியை மறைமுகமாகக் குற்றம்சாட்டுகிறார். பொள்ளாச்சி உபாதைகளால் இது நடக்கிறது என்கிறார்.

கவிஞர்கள் அறிவுசார்ந்து வருபவர்கள். யுவ புரஸ்கார் எவ்வளவு பெரிய விருது. அதை மிக எளிதாக விமர்சனம் செய்கிறார். பரிந்துரையின் பெயரில் கிடைத்தவிருது என கேள்விக்குள்ளாக்குகிறார். இதற்கு முன்பு இந்த விருதினைப் பெற்றவர்கள் அனைவரும் நவீனக் கவிஞர்கள். அவர்களது கவிதைகளுக்குள் அர்த்தம் இரண்டு, மூன்றுமுறை வாசித்தாலே புலப்படும். காளிமுத்துவின் கவிதைகள் நேரடியானவை. எளியவனுக்கும் புரியக்கூடியவை. கம்பராமாயணத்தையும், திருக்குறளையும் விளக்கம் படித்து தெளிவோம். ஆனால் பாரதியின் கவிதைக்கு விளக்கம் வேண்டாம். ஆனால் இரண்டுமே இலக்கியம் தான். திறமைதான்! அந்த இடைவெளி ஜெயமோகனுக்குப் புரியவில்லை.

புரியும்படி காளிமுத்து எழுதியிருப்பதுதான் ஜெயமோகனின் பிரச்சினை. இதைப்படித்துவிட்டு பலரும் எழுத வந்துவிடுவார்கள் என நினைக்கிறார். எளிமையானவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கும் ஆதங்கமே அவரிடம் இருந்து வெளிப்படுகிறது. இதேபோல் பலரும் எழுத்துலகுக்கு வந்து பங்களிப்பு செய்துவிடக் கூடாது என நினைக்கிறார். பரிந்துரை என்னும் பெயரில் தேர்வுக்குழுவையும், கவிஞர் சிற்பி போன்றவரையும் இதில் இழிவுபடுத்துவதை ஜெயமோகன் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in