2 ஆண்டுகளாக அமீரகத்தில் பாதுகாக்கப்பட்ட தமிழரின் அஸ்தி: அவரது குடும்பத்திடம் வழங்க நேசக்கரம் நீட்டிய இஸ்லாமிய பெண்

2 ஆண்டுகளாக அமீரகத்தில் பாதுகாக்கப்பட்ட தமிழரின் அஸ்தி: அவரது குடும்பத்திடம் வழங்க நேசக்கரம் நீட்டிய இஸ்லாமிய பெண்

ஐய்க்கிய அரபு அமீரகத்தின், அஜ்மானில் கரோனாவால் இந்து குடும்பத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் உயிரிழந்தார். அவரது அஸ்தி கடந்த ஓராண்டாகவே மருத்துவமனை வளாகத்திலேயே இருந்தது. சேவை மனப்பான்மையோடு கேரளத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் அதை தமிழகம் கொண்டுவர உள்ளார்.

குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர் தங்கப்பன். இவர் அஜ்மானில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலைசெய்துவந்தார். ஏற்கெனவே இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் தன் மகன், மகளை உறவினர்களின் பாதுகாப்பில் விட்டுவிட்டு அஜ்மானில் வேலைக்குச் சென்றிருந்தார். அங்கு வேலைக்கு சேர்ந்து 9 மாதங்களிலேயே கரோனா வந்துவிட்டது.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட தங்கப்பன், சிகிச்சைப் பலனின்றி கடந்த 2020 மே 13-ம் தேதி உயிரிழந்தார். இவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்மத வழக்கப்படி, தங்கப்பனின் உடல் எரியூட்டப்பட்டு, அவரது அஸ்தி மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

ஆனால், தங்கப்பனின் உறவினர்கள் யாரும் வளைகுடா நாட்டில் இல்லாததால் அவரது அஸ்தி மருத்துவமனையிலேயே கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டது. அதேநேரம் தங்கப்பனின் குடும்பத்தின்ர் அவரது அஸ்திகிடைத்தால் மதச்சடங்குகளை நிறைவேற்றுவோம் என தெரிவித்தனர்.

இதனைப் பார்த்துவிட்டு சிஜோபால் என்னும் சமூக ஆர்வலர் அஸ்தியை வாங்கி தன் வீட்டில் வைத்திருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த அவர் சொந்த ஊருக்கு வரும்போது இதைக் கொண்டு சேர்க்கலாம் என வைத்திருந்தார். இந்நிலையில் அல் அய்ன் நகரில் சுகாதாரத்துறையில் பணிசெய்யும் கேரளாவைச் சேர்ந்த தாகிரா கல்லுமுரிக்கல் என்பவர் தான் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தங்கப்பனின் குடும்பத்திடம் அஸ்தியைக் கொடுப்பதற்காக பெற்றுள்ளார்.

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் அஸ்தியைக் கொண்டு செல்லும் ஆவணம் வினியோகித்துள்ளது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தங்கப்பனின் அஸ்தி, சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in