தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு, தச்சங்குறிச்சியில் தொடங்கியது

தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு,  தச்சங்குறிச்சியில் தொடங்கியது

தமிழ்நாட்டின்  முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி, புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று வெகு உற்சாகத்துடன் தொடங்கியது.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் என்றாலே  அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகள்தான் மக்களின் நினைவுக்கு வரும். நிதர்சனத்தில் தமிழ்நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது  புதுக்கோட்டை மாவட்டத்தில்தான். பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு முதலில் தொடங்குவதும் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான்.  

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் ஜனவரி மாதம் 2-ம் தேதியே எப்போதும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன் பின்னரே தமிழ்நாட்டின் மற்ற ஊர்களில் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்படும்.  அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விமரிசையாக தொடங்கியுள்ளது.

போட்டியை  ஜனவரி இரண்டாம் தேதி நடத்துவதற்கு அனுமதி கேட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊர் மக்கள் ஆட்சியரிடம் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அரசாணை வெளியிடப்படாததால் அதற்கு உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை. பின்னர் போட்டியை 6-ம் தேதி நடத்துவதற்கு முடிவு செய்து விண்ணப்பித்திருந்தனர். அதற்காக கடந்த ஐந்தாம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ஆறாம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை முறையாக மேற்கொள்ளவில்லை என்பன உள்ளிட்ட சில காரணங்களுக்காக, அன்றைய தினமும்  ஜல்லிக்கட்டு நடைபெற அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து அந்த ஊர் மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால் அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட நிர்வாகம் இன்று போட்டி நடைபெற அனுமதி அளித்திருந்தது. 

அதனையடுத்து இன்று காலை வெகு உற்சாகத்துடன் போட்டி தொடங்கியுள்ளது. காலை 8 மணிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்,  மாவட்ட ஆட்சியர் கவிதாராமு உள்ளிட்டோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராஜா, சின்னத்துரை உள்ளிட்டோர் அவர்களுடன் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்து வருகின்றனர். முன்னதாக நேரம் கருதி உள்ளூரில் உள்ள  கோயில் மாடுகள் அமைச்சர்கள் வருவதற்கு முன்பே அவிழ்த்துவிடப்பட்டன. 

போட்டியில் பங்கேற்க மொத்தம் 500 காளைகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இரு தரப்பினரும் விறுவிறுப்பாக களத்தில் உள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தலைமையிலான போலீஸார், மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டு அமைதியாக நடைபெறுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச்  செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in