குடியரசுத் தினவிழாவில் கம்பீரமாய் அணிவகுத்த `தமிழ்நாடு வாழ்க' வாகனம்!

அணிவகுத்த `தமிழ்நாடு வாழ்க' வாகனம்!
அணிவகுத்த `தமிழ்நாடு வாழ்க' வாகனம்!குடியரசுத் தினவிழாவில் கம்பீரமாய் அணிவகுத்த `தமிழ்நாடு வாழ்க' வாகனம்!

தமிழ்நாடு பெயர் குறித்த சர்ச்சை ஓரளவுக்கு ஓய்ந்திருக்கும் நிலையில் இதுகுறித்த தமிழ்நாட்டின்  நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக விளக்கும்  வகையில் 'தமிழ்நாடு வாழ்க' என்ற வாகனம் அணிவகுப்பில் முதலாவதாக வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை  மெரினா காமராஜர் சாலையில்  நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

முப்படையினர், கடலோர காவல் படையினர், காவல், சிறை, வனம், தீயணைப்பு துறையினர், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பும், கடலோர காவல் படை, கடற்படை, விமானப்படையின் அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் வலம் வந்தன.

`தமிழ்நாடு வாழ்க' வாகனம்!
`தமிழ்நாடு வாழ்க' வாகனம்!`தமிழ்நாடு வாழ்க' வாகனம்!

அதனைத் தொடர்ந்து  தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த `தமிழ்நாடு வாழ்க' என்று வாசகம் இடம் பெற்றிருந்த வாகனம் முதலில் வந்தது. அதில் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வந்த 'தமிழ்நாடு வாழ்க' என்ற கோலம் முகப்பில் பிரதானமாக இடம் பெற்று இருந்தது.  அதற்கு மேல்  'தமிழ்நாடு வாழ்க' என்ற வாசகம் காணப்பட்டது.

தமிழகம் என்ற வார்த்தையை ஆளுநர் ரவி பிரயோகித்ததன் விளைவாக எழுந்த பிரளயத்தின் தொடர்ச்சியாக  அனைவரும் தங்கள் வீட்டு வாசலில் 'தமிழ்நாடு வாழ்க' என்று பொங்கல்  தினத்தன்று கோலமிட வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  அதனை ஏற்று பொதுமக்கள் பலரும் 'தமிழ்நாடு வாழ்க' என்று தங்கள் இல்லத்தில் கோலமிட்டு இருந்தனர். அதில் ஒருவர் வரைந்திருந்த கோலம் தான் தற்போது அணிவகுப்பு வாகனத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாடு பெயர் குறித்த சர்ச்சை குடியரசுத் தலைவரிடம் திமுக எம்பிக்கள் முறையிடுவது வரை சென்ற பின்னர் தமிழ்நாட்டின் ஆளுநரிடம் மாற்றம் ஏற்பட்டது. தமிழ்நாடு என்ற பெயரை மாற்றச் சொல்லி,  தான் பரிந்துரைக்கவில்லை என்று விளக்கம் கொடுத்திருந்தார்.  அதன் பின்னர் நேற்று நடைபெற்ற விழாவில் 'தமிழ்நாடு வாழ்க' என்று ஆளுநர் முழங்கினார். 

இந்த நிலையில் இன்று நடைபெற்ற குடியரசுத் தின விழாவில் 'தமிழ்நாடு வாழ்க' என்ற அணி வாகனம் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in