பள்ளி ஆசிரியருக்கு அடி, உதை... பிரம்படிபட்ட மாணவன் கை, கால் வீங்கியதால் உறவினர்கள் ஆத்திரம்!

ஆசிரியர் மோகன்பாபு
ஆசிரியர் மோகன்பாபு

திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பூவலம்பேடு திடீர் நகரைச் சேர்ந்த சுரேஷ்பாபு- செவ்வந்தி தம்பதியரின் மகன் ஹரிஹரன். இவர் குருவராஜகண்டிகை அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று வகுப்பறையில் மாணவன் ஹரிஹரன் துடுக்காக நடந்துகொண்டதாக தெரிகிறது. இதில் கோபமான பள்ளியின் தற்காலிக ஆசிரியர் மோகன் பாபு, மாணவனை பிரம்பால் அடித்துள்ளார். இதனால், ஹரிஹரனுக்கு கை மற்றும் கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பள்ளி நிர்வாகம் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், வீட்டிற்கும் அனுப்பாமல் இரவு எட்டு மணி வரை பள்ளியில் வைத்து ஐஸ் கட்டியால் வீக்கத்திற்கு ஒத்தடம் கொடுத்து அனுப்பியுள்ளது.

இதனையடுத்து, மாணவனிடம் வீட்டில் சொன்னால் பள்ளியை விட்டு நிறுத்தி விடுவதாக ஆசிரியர்கள் தரப்பில் கூறியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன மாணவன் பெற்றோரிடம் கூறாமல் தூங்கியுள்ளான். காலையில் கை, கால்வீங்கியதைக் கண்ட பெற்றோர் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்த போது, தற்காலிக ஆசிரியர் மோகன்பாபு மாணவனைத் தாக்கியது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மோகன்பாபுவை சரமாரியாகத் தாக்கினர். மேலும், நியாயம் கேட்டு பள்ளி வளாகத்தில் போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போக செய்தனர். இந்நிலையில், பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை பெற்றோர் தாக்கிய வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in