கேரளாவில் 1,300 கிலோ ஏலக்காய் பாக்கெட்; தமிழக கடல் வழியாக கடத்தல்: சிக்கிய இலங்கை நபர்கள்

கேரளாவில் 1,300 கிலோ ஏலக்காய் பாக்கெட்; தமிழக கடல் வழியாக கடத்தல்: சிக்கிய இலங்கை நபர்கள்

தமிழக கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் சென்ற 1,300 கிலோ ஏலக்காய் பாக்கெட் மூடைகளை கற்பிட்டி சிறப்பு அதிரடிப்படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் இருந்து சமையலுக்கு பயன்படுத்தும் வாசனை பொருட்கள் இலங்கைக்கு கடத்தி வரப்பட்டுள்ளதாக கற்பிட்டி கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, போலீஸ் சிறப்பு அதிரடிப்படையினருடன் இணைந்து தேடுதல் பணியை மேற்கொண்டனர்.

அப்போது இரண்டு சரக்கு வாகனங்களில் தேங்காய் மூடைகளுக்குள் ஏலக்காய் மூடைகளை மறைத்து ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஏலக்காய் மூடைகளை எடையிட்ட போது 1,300 கிலோ இருந்தது தெரிந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.1.50 கோடி என போலீஸார் தெரிவித்தனர். கேரளாவில் பாக்கெட் செய்யப்பட்ட இந்த ஏலக்காய் பாக்கெட்கள் தமிழக கடல் வழியாக கடத்தி வந்தது எனவும் தெரிந்தது. இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இருவரை கற்பிட்டி சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவர், பறிமுதல் செய்த ஏலக்காய் பாக்கெட் மூடைகள், 2 நான்கு சக்கர வாகனங்களை கட்டுநாயக்க சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்ததாக போலீஸ் சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in