
தமிழ்நாடு முழுவதும் நாளை (ஜன.21) கள் இறக்கி விற்கும் அறவழி போராட்டத்திற்கு தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடு கள் இயக்கம், தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் ஆகிய இயக்கங்கள் தமிழ்நாட்டில் கள் இறக்க விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றன. அவர்களின் கள் விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் நாளை கள் இறக்கி விற்பனை செய்யும் அறவழி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அன்றைய தினம் காலை 9 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் பூரிகுடிசை கிராமத்தில் தமிழர் திருநாளைக் கொண்டாடும் விதமாக பொங்கலோ பொங்கல் விழாவினை 100 பனையேறி குடும்பங்களோடு கூடிக் கொண்டாடுகின்றனர்.
இவ்விழாவில் பதநீர் பொங்கல், கள் பொங்கல் ஆகிய பொங்கல் வைத்து பனைமரத்திற்கு படையலிட்டு வழிபடுகிறார்கள்.
சிலம்பாட்டத்தோடு பறையிசைத்து, ஆட்டம் பாட்டத்தோடு விளையாடி மகிழ்ந்து பனைக்கும், தமிழர்களுக்கும் உள்ள உறவையும், உணவில் கள்ளுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பை உணர்வாக வெளிப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
அன்றைய தினம் தமிழகம் முழுவதும் இந்த இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கள் இறக்கி விற்கும் அறவழி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும், பூரிகுடிசையில் நடைபெறும் கள் பொங்கல் விழாவிற்கு அனைவரும் வந்து கலந்து கொள்ளும்படியும் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
கள் இறக்குவதும் பருகுவதும் இந்திய அரசியலமைப்பு சாசனம் இந்திய குடிமக்களாகிய நமக்களித்திருக்கும் உணவு தேடும் உரிமையாகும். கள் எமது உணவு, கள் எமது உரிமை என்றும் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் அறைகூவல் விடுத்துள்ளது.