இந்தியாவில் ஏடிஎம் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்

இந்தியாவில் ஏடிஎம் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்

 இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக ஏடிஎம்கள் உள்ளன என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நடப்பாண்டு புள்ளி விவரம் பட்டியல் மூலம் தெரிய வந்துள்ளது. 

ஒரு காலத்தில் நமது சேமிப்பு பணத்தை, வங்கி கணக்கு மூலம் பரிவர்த்தனை செய்து வந்தோம். குறைந்த இருப்பு தொகை அடிப்படையில் சேமிப்பு, நடப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு காசோலை புத்தகம் வழங்கி பணம் எடுக்க எளிய நடைமுறையை கொண்டு வந்தது. இருப்பினும் பணத்தை எடுக்க வங்கி கிளைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

இதில் புதிய முயற்சியாக வெளிநாடுகள் அமல் உள்ள ஏடிஎம் மையங்கள் நிறுவப்பட்டன. நாளடைவில் இதன் எண்ணிக்கை பல்கி பெருகின. குக்கிராமங்களில் கூட தடுக்கி விழுந்தால் ஏடிஎம் மையத்தில் தான் விழ வேண்டும் என்ற நிலை வந்து விட்டது. மக்கள் பெருக்கம் அதிகம் வசிக்குமிடங்கள் அவர்களின் தெருக்களில் வந்து விட்டதால் நினைத்த நேரத்தில் பண பரிவர்த்தனை மிக எளிதாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிதி ஆண்டு , அரையாண்டு கணக்கு தணிக்கை நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு பண வர்த்தனை நிறுத்தப்படுகிறது. இக்காலக் கட்டத்தில் மக்களுக்குத் தேவையான பணம் எடுக்க ஏடிஎம் மையங்களில் நிறைய வசதிகள் வந்துவிட்டன. பணம் எடுத்தல் மட்மின்றி, பிறரது கணக்கில் பணம் செலுத்துவதும் ஏடிஎம் மையம் மூலம் அதிகம் நடைபெறுகிறது.

வாடிக்கையாளர் கணக்கில் இருப்பு தொகை, ஓராண்டில் எத்தனை முறை பண வர்த்தனை செய்துள்ளோம் உள்ளிட்ட வசதிகள் ஏடிஎம் இயந்திரம் மூலம் பார்த்து கொள்ள முடிகிறது. எந்நேரமும் இத்தகைய வசதிகளை வாடிக்கையாளர்கள் பார்த்து கொள்ளலாம். ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர் நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன்படி நாட்டிலேயே பிற மாநிலங்களை விட தமிழகத்தில் ஏடிஎம் மையங்கள் அதிகம் உள்ளன.  2022 டிசம்பர் மாத கணக்கெடுப்பு படி, இந்தியாவில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 718 ஏடிஎம் மையங்கள் உள்ளன. இதில் தமிழகம் 29 ஆயிரத்து 602 ஏடிஎம்களுடன் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 29 ஆயிரத்து 269, உத்தரப் பிரதேசம் 24 ஆயிரத்து 467 ஏடிஎம்களுடன் இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்துள்ளன.மேகலாயா, சிக்கிம், மிஜோரம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், அந்தமான் நிகோபர் தீவுகள், டையு டாமன் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 500-க்கும் குறைவான எண்ணிக்கையில் ஏடிஎம் மையங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தில் 22 ஏடிஎம்கள் உள்ளன. தமிழகத்தில் ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட, போதிய பணம் இருப்பு இன்மை, அடிக்கடி மூடி கிடப்பு உள்ளிட்ட புகார்கள் வாடிக்கையாளர்கள் சார்பில் இன்றும் தொடர்கதையாகவே உள்ளது. இரவு வேளைவில் செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எண்ணிக்கையை அதிகப்படுத்துவதை விட, பழக்கத்தில் உள்ள ஏடிஎம்களை முறையாக செயல்படுத்த சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகங்கள் முன் வர வேண்டும் என வாடிக்கையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர் .

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in