போலீஸ் பாதுகாப்புடன் சிதம்பரம் கோயிலில் குடும்பத்தினருடன் ஆளுநர் தரிசனம்!

சிதம்பரம் கோயிலில் தாய் மற்றும் மனைவி சகிதமாக ஆளுநர் ரவி
சிதம்பரம் கோயிலில் தாய் மற்றும் மனைவி சகிதமாக ஆளுநர் ரவி போலீஸ் பாதுகாப்புடன் சிதம்பரம் கோயிலில் குடும்பத்தினருடன் ஆளுநர் தரிசனம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது தாய் மற்றும் மனைவியுடன் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நடைபெற்று வரும் நாட்டியாஞ்சலி விழா உலகப் புகழ் பெற்றது. அந்த நாட்டியாஞ்சலியில்  கலந்து கொண்டு தனது நாட்டியத்தை நடராஜருக்கு அர்ப்பணிப்பது என்பது நாட்டிய கலைஞர்களின் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது. 42-வது ஆண்டாக இந்த ஆண்டும் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. 

நேற்று இரவு நடைபெற்ற அதன் நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி  கார் மூலம்  சிதம்பரம் வந்து சேர்ந்தார். அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தவர் இரவு நாட்டியாஞ்சலி விழாவில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் சென்று தங்கினார்.

இன்று காலை தனது மனைவி மற்றும் தாயார் சகிதமாக நடராஜர் கோயிலுக்கு வருகை தந்தார். அவருக்கு தீட்சிதர்கள் தரப்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.  இதனையடுத்து தன்னுடைய மேல் சட்டையை கழற்றிவிட்டு பொன்னம்பல மேடையில் ஏறி குடும்பத்தினருடன் நடராஜரை தரிசித்து வழிபட்டார்.

அதன் பின்னர் சிதம்பரத்தில் உள்ள சுவாமி சகஜானந்தர் நினைவிடத்திற்கு சென்றவர் அங்குள்ள சகஜானந்தா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை ஒட்டி சிதம்பரம் நகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் கார் மூலமாக சென்னை நோக்கி ஆளுநர் புறப்பட்டுச் சென்றார். செல்லும் வழியில் புதுச்சேரியில் தனியார் நட்சத்திர விடுதியில் உணவருந்தி சற்று நேரம் ஓய்வு எடுக்கிறார். ஆளுநரின் வருகையை ஒட்டி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் உயர் போலீஸ் போலீஸார் சிதம்பரத்தில் முகாமிட்டு விழாவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in