15 டிசைனில் சேலை, 5 டிசைனில் வேட்டி: மக்களுக்கு வழங்கப்படுகிறது பொங்கல் பரிசு!
பொங்கல் பண்டிகையையொட்டி 15 டிசைனில் சேலைகளும், 5 டிசைன்களில் வேட்டியும் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையின் போது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரருக்கு இலவசமாக வழங்க 1.26 கோடி வேட்டியும், 99.56 லட்சம் சேலை விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையின்போது வழங்குவதற்கான வேட்டி- சேலை திட்டத்திற்கு முதல் தவணை தொகையாக 23.96 கோடி ஒதுக்கி உள்ளது தமிழக அரசு.

இந்த நிலையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி,காந்தி, சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டிகள் மற்றும் சேலைகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பொங்கல் அன்று 15 டிசைனில் சேலைகளும், 5 டிசைன்களில் வேட்டியும் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.