கொரோனா காலத்தில் வேலையிழந்து நாடு திரும்பியவர்களா நீங்கள்?- தமிழக அரசு சிறப்புத் திட்டம் அறிமுகம்

கொரோனா காலத்தில் வேலையிழந்து நாடு திரும்பியவர்களா நீங்கள்?- தமிழக அரசு சிறப்புத் திட்டம் அறிமுகம்

கொரோனாவால் வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பியவர்களுக்காக  தமிழக அரசின்  சார்பில் சிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய புலம்பெயர்ந்தோருக்கு 25 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க ஏதுவாக “புலம் பெயர்ந்தோருக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்” என்னும் சிறப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசு  அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொரோனா தொற்று பரவலால் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெற்று பயன்பெறலாம். 

கொரோனா பரவல் காரணமாக கடந்த  2020 ஜனவரி 1 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் தமிழகம் திரும்பியவர்கள், வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களை அதிகபட்சம் 5 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும், உற்பத்தி சார்ந்த தொழில்களை அதிகபட்சம் 15 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும் தொடங்கலாம். 

இத்திட்டத்தில் பயன்பெற குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு பொது பிரிவினருக்கு 18 முதல் 45 வரையிலும், இதர பிரிவினருக்கு 18 முதல் 55 வரையிலும் இருக்க வேண்டும்.

சொந்த முதலீடாக பொது பிரிவினர் திட்டத் தொகையில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் செலுத்த வேண்டும். 

இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் மானியம் வழங்கப்படும். இம்மானியத் தொகை 3 ஆண்டுகளுக்கு வங்கியில் வைப்புநிதியாக வைக்கப்பட்டு பின் கடனுக்கு சரிகட்டப்படும்.

இத்திட்டமானது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் மூலம் மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன்  www.msmeonline.tn.gov.in  என்ற தளத்தில் இணையவழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்டங்களின்  மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.

கோவையில் உள்ளோர்  நேரடியாகவோ அல்லது 0422-2391678, 2397311 என்ற எண்கள் மூலமாகவோ மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம் என கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in