
ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க உணவு பாதுகாப்பு விதிகள் அனுமதிப்பதாக உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், உணவு பாதுகாப்பு விதிகளில், ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், அலுமினியம் ஃபாயில்களில் அடைத்து விற்க அனுமதிப்பதாகவும், ஆவின் நிறுவனம் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடிநீர் பாட்டில்கள் பயன்பாட்டை தவிர்க்க ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத்தலங்கள் ஆகிய இடங்களில் குடிநீர் வழங்கல் இயந்திரங்களை நிறுவலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதற்காக 33.84 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், குடிநீர் உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக 384 குற்ற வழக்குகள் பதியப்பட்டு, 27.62 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 363 உரிமையியல் வழக்குகளில் 54.70 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.