வினாடிக்கு 12,000 கனஅடி நீர்... காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!

கர்நாடக தண்ணீர் திறப்பு
கர்நாடக தண்ணீர் திறப்பு
Updated on
1 min read

காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தாக்கல் செய்யவுள்ள நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு முறையாக திறந்து விடவில்லை. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. குறுவை சாகுபடிக்காக பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கருகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை முறைப்படித் திறந்துவிட உத்தரவிட வேண்டுமென அண்மையில் முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார், 'சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். தினமும் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட வேண்டும்' என்று உத்தரவிட்டார். ஆனால் இதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசித்தான் முடிவெடுக்க முடியும் என கர்நாடக முதல்வர் தெரிவித்தார்.

இதற்கிடையில், காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு திங்கட்கிழமை (இன்று) சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். கர்நாடகத்தின் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 6,998 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணையில் இருந்து வினாடிக்கு 5,268 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. தற்போது தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 11,998 கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. இது அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in