பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் சாலை மறியல்!

மயிலாடுதுறையில் நடைபெற்ற சாலை மறியல்
மயிலாடுதுறையில் நடைபெற்ற சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மயிலாடுதுறையில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் விளைவாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பதினோராம் தேதி தொடங்கி 12-ம் தேதிவரை ஒரு நாளில் மிக அதிக கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட தாலுகாக்கள் இன்னும் வெள்ளைக்காடாக காட்சியளிக்கின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலின்,  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சீர்காழி பகுதிக்கு வந்து பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறி சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35000 ரூபாயும் விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு குடும்ப அட்டைக்கு தலா 10000 ரூபாயும் அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்,  சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையை மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் தாலுகாகளுக்கு சேர்த்து அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை  வலியுறுத்தி இன்று மயிலாடுதுறையில்  கிட்டப்பா அங்காடி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறிது நேர சாலை மறியலுக்கு பின் மயிலாடுதுறை டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினரின் பேச்சுவார்த்தையை அடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in