தமிழக டிஜிபி அலுவலகத்தை மாதர் சங்கத்தினர் முற்றுகையிட முயற்சி: போலீஸார் தடுத்ததால் சாலைமறியல்

தமிழக டிஜிபி அலுவலகத்தை மாதர் சங்கத்தினர் முற்றுகையிட முயற்சி: போலீஸார் தடுத்ததால்  சாலைமறியல்

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் உள்ள காவல் துறை தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சென்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரை போலீஸார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவி ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கில் கைதான பள்ளி நிர்வாகிகள் 5 பேர் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இவ்வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், தமிழக காவல் துறை தலைவர் அலுவலகத்தை இன்று முற்றுகையிடுவோம் என அறிவித்திருந்தனர்.

சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி, மாநில நிர்வாகி பாலபாரதி ஆகியோர் தலைமையில் 60-க்கும் மேற்பட்டோர் ராதாகிருஷ்ணன் சாலையில் திரண்டனர். ஆனால், அவர்கள் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுத்தது. ஆனால், அதனையும் மீறி ராதா கிருஷ்ணன் சாலையில் இருந்து டிஜிபி அலுவலகம் நோக்கி மாதர் சங்கத்தினர் ஊர்வலமாகச் சென்றனர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாதர் சங்கத்தினர் திடீரென சாலைமறியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

இப்போராட்டம் குறித்து மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி செய்தியாளர்களிடம் கூறுகையில், "கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நியாயம் கேட்டு இந்த போரட்டத்தை நடத்துகிறோம். டிஜிபி அலுவலகம் முன்பு போரட்டம் நடத்த வந்த எங்களை காவல்துறையினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி கைது செய்து வருகின்றனர். மாணவி மரணத்தை மூடி மறைக்க காவல்துறை முயற்சி செய்கிறது. எனவே, வழக்கு விசாரணையை காவல் துறை துரிதப்படுத்த வேண்டும், அத்துடன் இவ்வழக்கில் போக்சோ சட்டப்பிரிவை இணைக்கவேண்டும், குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in