மாணவர்கள் 15-ம் தேதி முதல் பள்ளியில் பசியாறலாம்

மாணவர்கள்  15-ம்  தேதி முதல் பள்ளியில்  பசியாறலாம்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை அண்ணா பிறந்த நாளான 15-ம் தேதி அன்று முதலமைச்சர் ஸ்டாலின் மதுரையில் துவக்கி வைக்கிறார். 16-ம் தேதி முதல் மற்ற இடங்களில் திட்டம் துவங்கி வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்துதல், வருகையை அதிகப்படுத்துதல், ஊட்ட சத்தினை உறுதி செய்தல் வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தினை எதிர்வரும் 15-ம் தேதி அன்று மதுரையில் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். மற்ற மாவட்டங்களில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆட்சியர்கள் உள்ளாட்சி நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் திட்டத்தை துவக்கி வைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த 1,14,095 மாணவா்கள் பயன் பெற இருக்கிறார்கள். திட்டத்தின் படி திங்கள்கிழமை, வியாழக்கிழமைகளில் ரவை உப்புமா, சேமியா, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ரவை கிச்சடி, சேமியா, சோளம், கோதுமை ரவை கிச்சடியில் ஏதேனும் ஒன்று வழங்கப்படும். புதன்கிழமை ரவை அல்லது வெண்பொங்கல், வெள்ளிக்கிழமை மட்டும் ரவை அல்லது சேமியா கேசரி வழங்கப்படும். காய்கறி சாம்பாா் தினமும் அளிக்கப்படும்.

பள்ளி வயது சிறுவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காக 1957-ல் மதிய உணவுத் திட்டத்தை முன்னாள் முதல்வா் காமராஜர் தொடக்கி வைத்தாா். அதன்பின்னர் எம்.ஜி.ஆா். 9-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு சத்துணவுத் திட்டத்தை 1982 ல் கொண்டு வந்தார். சத்துணவுடன் முட்டை வழங்குவதை 1989-ல் கருணாநிதி அறிமுகப் படுத்தினாா். அது தற்போது மேலும் விரிவடைந்து பள்ளிக்கு வரும் சிறுவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டமாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சி காலத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in