ஆன்லைன் சூதாட்டத்துக்கு வருகிறது தடை: சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

ஆன்லைன் சூதாட்டத்துக்கு வருகிறது தடை: சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த தடை சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசு கொண்டுவந்த ஆன்லைன் தடை சட்டத்தை ரத்து செய்தது. அவசரக்கதியில் இருந்த சட்டம் கொண்டு வந்ததாக கூறி எதிர்க்கட்சிகள் அப்போது விமர்சனம் செய்தன. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை கொண்டுவர முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது.

அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் தலைமையில் ஐ.ஐ.டி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனர், உளவியல் மருத்துவர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே மற்றும் ஐ.பி.எஸ் அலுவலர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த குழு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும் எனவும் கூறப்பட்டது. குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தக் குழுவானது, ஆன்லைன் விளையாட்டுகள் திறன்களை வளர்கின்றனவா, இதன்மூலம் ஏற்படும் தீமைகள், நிதியிழப்பு என்னென்ன என்பது குறித்து ஆய்வு செய்தது. ஆன்லைன் விளையாட்டுகளில் பண பணப்பரிவர்த்தனை எந்தளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டது. ஆன்லைன் விளையாட்டுக்குத் தடைச் சட்ட மசோதாவை உருவாக்குவதற்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்தும் இந்தக் குழு ஆய்வு நடத்தியது. நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவினர் தங்கள் ஆய்வை அண்மையில் நிறைவு செய்தனர். இதையடுத்து, ஆய்வு முடிவுகள் குறித்த அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் குழு உறுப்பினர்கள் ஜூன் 27-ம் தேதி சமர்ப்பித்தனர்.

இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக்கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்துப் பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு ஆகஸ்ட் 29-ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அக்கூட்டத்தில், இந்த அவசரச் சட்டம் மேலும் மெருகூட்டப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு, மீண்டும் முழு வடிவில் அமைச்சரவைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதற்கிணங்க அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in