சபரிமலையில் ஜன.14ல் மகரவிளக்கு: பம்பை ஆற்றைத் தூய்மைப்படுத்தும் தமிழக ஐயப்ப பக்தர்கள்

சபரிமலை
சபரிமலை

சபரிமலை அய்யன் கோயில் நடை மகரவிளக்கு தரிசனத்திற்காக வரும் 16-ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளில் கேரள தேவசம்போர்டு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இதில் பம்பை ஆற்றை தமிழக பக்தர்கள் சுத்தம் செய்ய முகாமிட்டுள்ளனர்.

சபரிமலை நடை நவம்பர் 16-ம் தேதி மாலைதிறக்கப்பட உள்ளது. நவம்பர் 17-ம் தேதி முதல் டிசம்பர் 27-ம் தேதி வரை மண்டல பூஜை நடக்கிறது. டிசம்பர் 27 இரவு நடை அடைக்கப்படும். மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி நடை திறக்கப்படுகிறது.

மகரவிளக்கு பூஜை ஜனவரி 14-ம் தேதி நடக்கிறது. சபரிமலை நடை ஜனவரி 20-ம் தேதிவரை திறந்திருக்கும். சபரிமலைக்கு செல்வோர் இம்முறை முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக பம்பை, நிலக்கல் பகுதிகளில் 13 இடங்களில் ஆன்லைன் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. ஒருநாளுக்கு இத்தனை பக்தர்கள்தான் என எதுவும் வரையறுக்கப்படவில்லை. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆதார் அட்டையைக் கொண்டுவர வேண்டும் எனவும், சபரிமலை வருவோருக்கு கரோனா பரிசோதனை சான்றிதழும் அவசியம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காலச்சூழலுக்கு பின்பு முதன்முறையாக இப்போது எருமேலி, அழுதா, கரிமலை பாதை பக்தர்களுக்காகத் திறக்கப்படுகிறது. இந்த வழியில் செல்லும் பக்தர்களுக்குத் தண்ணீர் மற்றும் உணவுத்தேவையைத் திருவிதாங்கூர் தேவசம்போர்டு செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலையின் பல்வேறு பகுதிகளிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாக சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் புண்ணிய நீராடிச் செல்லும் பம்பை ஆறு, மற்றும் பக்தர்கள் இருக்கும் பம்பை வளாகப் பகுதி ஆகிய இடங்களை சுத்தம் செய்ய அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் தமிழகக் குழுவிடம் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேட்டிருந்தது.

அதன்படி, தமிழகத்தின் கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 110 ஐயப்ப சேவா சங்க பக்தர்கள் பம்பையில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் பம்பை வளாகத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in