தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை: ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது

பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை
பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைதமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை: ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி, இந்த ஆண்டுக்கான பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு, தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆன்லைன் வழியாக அடுத்த மாதம் (ஜூலை) 2-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. அதன் பிறகு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நடக்கிறது.

பொறியியல் படிப்புக்கான இணையதள விண்ணப்பப்பதிவு மே 5-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. பொறியியல் படிப்பில் சேர தமிழகம் முழுவதும் மொத்தம் 2,29,167 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 1,87,693 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் 1,55,124 பேர் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 18,174 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொறியியல் படிப்பிற்கான மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரேண்டம் எண் இன்று (ஜூன் 6) வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு மாணவர்களுக்கும் ரேண்டம் எண் உருவாக்கப்படும் அதை இணையதளத்தில் மாணவர்கள் பார்க்கலாம். ஒரே மாதியாக கட்- ஆப் பெறும் மாணவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து ரேண்டம் எண் மூலம் முடிவு செய்யப்படும்.

மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் ஆன்லைன் மூலம் ஜூன் 20-ம் தேதி வரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து தரவரிசை பட்டியல் ஜூன் 26-ம் தேதி வெளியிடப்படும். மேலும் மாணவர்கள் கூடுதல் விவரங்களை www.tneaonline.org மற்றும் tndte.gov.in ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in