பட்டா கத்தியோடு இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட ரவுடி பேபி தமன்னா திருப்பூரில் இருந்து தப்பியோட்டம்

ரவுடி பேபி தமன்னா
ரவுடி பேபி தமன்னாபட்டா கத்தியோடு இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட ரவுடி பேபி தமன்னா திருப்பூரில் இருந்து தப்பியோட்டம்

கையில் பட்டா கத்தி, வாயில் சிகரெட் என இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட ரவுடி பேபி தமன்னா திருப்பூரில் இருந்து திருவாரூருக்குத் தப்பி ஓடிவிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த ரவுடி கோகுல் (25). இவர் கோவை நீதிமன்றம் அருக கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் கடந்த 2021-ம் ஆண்டில் ரத்தினபுரியைச் சேர்ந்த ரவுடி குரங்கு ஸ்ரீராம் (22) என்பவரை வெட்டிக் கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தார். இதற்கு பழி வாங்க கோகுல் கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்தது .

இந்த விவகாரத்தில் குரங்கு ஸ்ரீராம் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்த முக்கிய குற்றவாளிகள் குறித்து நகர போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ரத்தினபுரியில் வசித்து வந்த தமன்னா என்ற வினோதினி (25) என்பவர் குறித்த தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது.

இவர் பீளமேடு பகுதியில் தனது நண்பர் ஒருவருடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இவரை போலீஸார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தனர். சிறைக்குச் சென்று ஜாமீனில் வந்த வினோதினி மேலும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

தனது நண்பர் சூர்யா (26) என்பவருடன் சேர்ந்து பணக்கார வாலிபர்களைச் சமூக வலைதளங்களின் மூலமாக நட்பு ஏற்படுத்தி வரவழைத்து மிரட்டி பணம் பறித்துள்ளதாக தெரிய வந்தது. கையில் டாட்டூ வரைந்து சினிமா நடிகை போல் போட்டோக்களைப் பதிவிட்டு தமன்னா என அடைமொழி வைத்து இவர் பல்வேறு மோசடிகளைச் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவரின் மோசடிகளால் ஏமாந்த வாலிபர்கள் புகார் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. கோகுல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பின்னர், வினோதினியின் அடாவடி விவகாரங்கள், இன்ஸ்டா கிராமில் அவர் பட்டா கத்தி, அரிவாள் காட்டி போஸ் கொடுத்த போட்டோ, வீடியோக்கள் வெளியாகி வைரலானது.

சிகரெட் புகைத்தபடி அவர் வெளியிட்ட வீடியோக்கள் வலைதளங்களில் வேகமாக பரவியது. இவருக்கு கோவை நகரில் உள்ள ரவுடிகளின் ஆதரவு இருப்பதாக தெரிகிறது. போலீஸார் தேடுவதை அறிந்து வினோதினி திருப்பூர் தப்பிச் சென்றார். போலீசார் அங்கே சென்று விசாரித்த போது திருவாரூர் தப்பிச் சென்று விட்டதாக தகவல் வெளியானது. தற்போது திருவாரூர், தஞ்சாவூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in