`கலைஞர் மாடலில் கம்பீரமாய் இருந்தோம்; திராவிட மாடலில் திணறிக் கொண்டிருக்கிறோம்'- குமுறும் ஆசிரியர்கள்

`கலைஞர் மாடலில் கம்பீரமாய் இருந்தோம்; திராவிட மாடலில் திணறிக் கொண்டிருக்கிறோம்'- குமுறும் ஆசிரியர்கள்

தமிழ்நாடு முழுவதும் அரசின் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒருமாதம் நிறைவடையப் போகிறது. ஆனால் இன்னும் மாணவர்களுக்கு சீருடைகள், பாடக்குறிப்பேடுகள், காலணிகள், புத்தகப் பைகள் என எதுவும் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்படவில்லை.

இதனால் பள்ளிகளில் முழுமையாக கற்பித்தல் செயல்களில் ஈடுபடமுடியாத அசாதாரண நிலை நிலவுகிறது. இதனால் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பும் குழப்பமும் நிலவிக் கொண்டிருக்கிறது. பல ஆசிரியர்கள் இது குறித்து தங்கள் நண்பர்களிடமும் தங்கள் குழுக்களிலும் கவலையுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர்.அவற்றின் தொகுப்பு இது.

புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கு இன்னும் பாடப்புத்தகங்கள் கூட வழங்கப்படவில்லை. மற்றவை தாமதமானாலும் பாடக் குறிப்பேடுகளையாவது இந்நேரம் வழங்கியிருக்க வேண்டும். ஒரு மாத காலமாக புதிய மாணவர்களுக்கு புத்தகமுமில்லை, குறிப்பேடுகளுமில்லை. மொத்தக் குழந்தைகளுக்கும் பாடக் குறிப்பேடுகள் அறவே இல்லை. இவை எதுவுமில்லாமல் எப்படி கல்வி கொடுப்பது? எங்கிருந்து தரம் கொடுப்பது?

ஆசிரியர்களின் உழைப்பின் பயனாக மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகள் சாதித்துக் காட்டியிருக்கின்றன. ஆனால் மாணவர்களைச் சேர்த்ததனால் கூடுதல் பணியிடங்களோடு, ஆசிரியர்கள் நியமனத்திற்காக காத்திருக்கும் பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் இந்நேரம் ஆசிரியர்களை நியமித்திருக்க வேண்டாமா? இல்லம் தேடிக் கல்வி என்னும் முறைசாரக் கல்விக்கு 1,81,000 நபர்களை நியமித்த அரசுக்கு, பள்ளிகளில் நடைபெறும் எல்.கே.ஜி, யு.கே.ஜி-க்கு 5,000 பேரை நியமிப்பதில் என்ன சிரமம் வந்துவிடப் போகிறது? இல்லம் தேடிக் கல்வியிலிருந்தே விருப்பப்பட்ட 5,000 நபர்களை அதற்கு நியமனம் செய்யத் திட்டமிடலாமே?

பள்ளிகள் திறந்து ஒருமாதம் ஆனபிறகு தனியார் பள்ளிகளில் எல்லோரும் சேர்ந்தபிறகு, எல்.கே.ஜி, யூ.கே.ஜி குறித்த சேர்க்கைக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஆசிரியர்கள் நியமனம் கிடையாது. ஆசிரியர்களை நியமிக்கச் சொன்னால் நியமிக்காமல் ஆயாக்கள் பாடம் நடத்துவார்கள் என்கிறார்கள். ஆனால் எது நடந்தாலும் தலைமை ஆசிரியர்தான் பொறுப்பு என்னும் பொறுப்பற்ற உத்தரவு.

இப்படி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை, பாடக் குறிப்புகள் உள்ளிட்ட எவையும் வழங்கப்படவில்லை என்பதால் பல பள்ளிகளில் மாணவர்கள் டி.சி வாங்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆறாம் வகுப்புக்குரிய மாணவர்கள் ஐந்தாம் வகுப்புக்குரிய பழைய சீருடையை அணிந்து வருகிறார்கள். இது போன்ற ஒரு நிலை எப்போதும் இருந்ததில்லை.

அரசாங்கம் தன் ஊழியர்களுக்குச் செய்யும் கடமைகளிலிருந்து விலகி நிற்பது, அதனை வழிநடத்தும் அதிகாரிகளுக்குத் தெரியாமலா இருக்கும். அரசை அசைத்துப் பார்க்கும் திட்டம் ஒருவேளை அதிகாரிகளுக்கு இருக்குமோ என்னவோ?. ஆசிரியர்களுக்கு ஆணைகள் மட்டுமே அனுப்பிக் கொண்டிருக்காமல், அவர்களது பிரச்சினைகளுக்குக் கொஞ்சம் காதுகொடுப்பதே கல்வியைக் காக்கும். ஆசிரியர்கள் ஊதியம் கேட்டோ, டி.ஏ கேட்டோ, சரண்டர் கேட்டோ கொந்தளிக்க வில்லை. இத்தனைக்கும் சங்கங்கள்கூட அரசிடம் சரண்டர் ஆகி விட்டன.

ஆசிரியர்கள் கேட்பது பள்ளியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர்களை உடனே நியமனம் செய்யுங்கள் என்பது மட்டும்தான். அரசுப் பள்ளிகளை நம்பிச் சேர்ந்த
பல லட்சம் குழந்தைகள் எப்பொழுது ஆசிரியர்களை நியமிப்பீர்கள் எனக் கேட்கின்றனர்.

காலிப்பணியிடங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு பெற்றவர்களை நேரடியாக அரசே தொகுப்பூதியத்தில் நியமிப்பதில் அரசுக்கு ஏன் இத்தனை தயக்கம்? அரசே நியமித்தால் வரும்நாளில் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டியிருக்கும் என்றால், தொகுப்பூதியத்திலேயே பணிபுரிய ஆசிரியர் பணி என்ன கொத்தடிமைப் பணியா?

அரசுப் பள்ளிகளைப் பெருமையாக வைத்திருக்க ஆசிரியர்கள் தயார்தான், அரசு தயாரா? என்பதுதான் கேள்வி. கலைஞர் மாடலில் கம்பீரமாய் இருந்த ஆசிரியர்கள், திராவிட மாடலில் திணறிக் கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை" என்று ஆசிரியர்கள் தங்கள் மனக்குமுறல்களை வெளியிடுகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in