ஏர்டெல்லை சதாய்க்கும் ‘5ஜி’ ஜியோ!

ஜியோவின் புதிய வியூகங்கள் எடுபடுமா?
ஏர்டெல்லை சதாய்க்கும் ‘5ஜி’ ஜியோ!

வரும் தீபாவளி முதல் 4 பெருநகரங்களில் தனது 5ஜி சேவையை அமல்படுத்தப்போவதாக அறிவித்திருக்கும் ஜியோ, இதில் அடுத்த தீபாவளிக்குள் நாட்டின் ஏனைய பகுதிகளும் இணைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. 5ஜி சேவைக்கான அறிமுகத்தில் ஆஃபர்களையும் அள்ளிவிடும் என்பதால், இந்த தீபாவளி முதல் அடுத்த தீபாவளி வரை ஓராண்டு காலத்துக்கு வாடிக்கையாளர்களைப் பண்டிகைக்கு இணையான கொண்டாட்டத்தில் ஆழ்த்த ஜியோ திட்டமிட்டிருக்கிறது. பிரதான போட்டியாளரான ஏர்டெல்லை சமாளிக்க 5ஜி-க்கு என தனித்துவ கட்டமைப்புக்கும் மூலதன செலவினத்தை வாரி இறைத்து வருகிறது.

ரிலையன்ஸ் நிறுவன பங்குதாரர்களுக்கான 45-வது வருடாந்திர கூட்டம் ஆகஸ்ட் 29-ல் நடைபெற்றது. முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் அறிவிப்புகள் வழக்கமாக இந்தக் கூட்டங்களில் வெளியாகும். இந்த வகையில் நடப்பு வருட சந்திப்பில் ஜியோவின் 5ஜி பிரதாபங்கள் ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்தன. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பெருமிதத்துடன் அவற்றை அறிவித்ததைத் தொடர்ந்து ஜியோ சார்பில் வெளியான விளக்கங்கள், போட்டி நிறுவனங்களை களத்தில் எதிர்கொள்வதற்கான வியூகங்களை விவரித்தன.

இந்தியாவின் இணைய சேவையை ஜியோ வருகைக்கு முன் - பின் என்றே பிரிக்கலாம். அந்தளவிற்கு 6 ஆண்டுகளுக்கு முன்னர் களமிறங்கிய ஜியோ அதகளம் நிகழ்த்தியது. 4ஜி புறப்பாட்டுடன் புகுந்த ஜியோவின் வேகத்துக்கு ஈடுதர முடியாது போட்டி நிறுவனங்கள் தடுமாறித் தவித்தன. இதே பாணியில் இம்முறை 5ஜி தொழில்நுட்பத்துடன்பிரவேசிக்கத் திட்டமிட்டுள்ளது ஜியோ நிறுவனம். பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், மத்திய அரசுகளின் தொடர் பாராமுகத்தால் ஒரு தலைமுறை பின்தங்கிக் கிடக்கிறது. கழுத்தை நெரிக்கும் கடன் சுமையால் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள போராடி வருகிறது வோடஃபோன் ஐடியா.

ஆப்பிரிக்க நாடுகளில் கால்பரப்பி வரும் ஏர்டெல், அதற்கான அழுத்தங்கள் மற்றும் இதர காரணங்களால் ஓராண்டு தாமதமாகவே இந்தியாவில் 5ஜி சேவையை வழங்கும் முடிவில் இருக்கிறது. இந்த வகையில் தனிக்காட்டு ராஜாவாக களமிறங்கும் ஜியோ, தனக்கான வாடிக்கையாளர்களை நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்ள புதிய தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்புகள், வாடிக்கையாளர்களுக்கான சலுகைகள் ஆகியவற்றுடன் வருகிறது.

ஜியோ 5ஜி சேவைக்காக மூலதன செலவினமாக ரூ.2 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளார் முகேஷ் அம்பானி. இதில் அலைக்கற்றைக்கான சுமார் ரூ.88 ஆயிரம் கோடியும் அடங்கும். எஞ்சிய சுமார் ரூ1.1 லட்சம் கோடியை மொபைல் சேவைக்காக 60 சதவீதம், பிராட்பேண்ட் இணைப்புகளாக்காக 40 சதவீதம் என ஜியோ பிரித்துள்ளது. பிரதான போட்டியாளரான ஏர்டெல் தனது 5ஜி சேவையை சுமார் 5 ஆயிரம் இந்திய நகரங்களில் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. 2024-ல் அமலாகவிருக்கும் இந்தப் போட்டியை முன்கூட்டியே முறியடிக்க ஜியோ முடிவு செய்துள்ளது.

4ஜி சேவைக்காக நடைமுறையில் இருக்கும் கட்டுமானங்கள் மற்றும் தொழில்நுட்ப வலைப்பின்னல்களின் நீட்சியாகவே 5ஜி சேவையை ஜியோவின் போட்டியாளர்கள் வழங்கவிருக்கின்றனர். ஆனால் 5ஜிக்கு என்றே தனித்துவ கட்டுமானங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்டுவருகிறது ஜியோ. இந்த தனித்துவ வேறுபாட்டை முன்னிறுத்தியே, ’உலகின் இதுவரையில்லாக 5ஜி இணைய சேவையை ஜியோ வழங்கப்போகிறது’ பங்குதாரர் மாநாட்டில் பிரகடனம் செய்தார் முகேஷ் அம்பானி.

போட்ட முதலீட்டை எப்படி எடுப்பது என்பதிலும் ஜியோ முன்னுள்ள சவால்கள் ஏராளம். புதிய வாடிக்கையாளர்களை வசமாக்குவது, நுகர்வை அதிகரிக்கச் செய்வன் மூலமான வருமான உயர்வு, 5ஜி வழி தொழில்நுட்பங்களில் அகலக்கால் வைப்பது என பல திட்டங்களை ஜியோ தீட்டி வைத்துள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை என பிரதான பெருநகரங்களில் இந்த தீபாவளிக்கு 5ஜி சேவையை அமல்படுத்தும் ஜியோ, அடுத்த ஓராண்டுக்குள் நாட்டின் இதர பகுதிகளுக்கு வருவதாக உறுதியளித்திருக்கிறது.

இந்த ஓராண்டு மற்றும் அதன் பின்னர் ஏர்டெல் களமிறங்கும் முதல் சில மாதங்களை உள்ளடக்கிய காலக்கட்டத்திற்கு வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான சலுகைகளை ஜியோ அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே கட்டண உயர்வை அமல்படுத்த வாய்ப்பிருக்கிறது. மின்னல் வேக இணைய சேவைக்கு அடிமையான வாடிக்கையாளர்கள் கட்டண உயர்வுக்கு உடன்படவும் தயாராகி இருப்பார்கள். விநாடிக்கான இணைய வேகத்தை ’எம்பி’க்களில்(Mbps) அளவிட்டு வரும்போக்கு இனி 1 ’ஜிபி’(Gbps) வரை எகிறும் என்பதால் வாடிக்கையாளர் மத்தியில் கட்டண உயர்வு ஒரு பொருட்டாகாது என்றும் கணித்திருக்கிறார்கள்.

இவற்றுக்கு அப்பால் சொந்தத் தயாரிப்பான ’ஜியோ நெக்ஸ்ட்’ வெளியிடவிருக்கும் 5ஜி அலைபேசிகள் மூலமும் வருமானம் ஈட்ட தயாராக உள்ளது. நாட்டின் அலைபேசி சந்தையை முழுவதுமாக புரட்டிபோடவிருக்கும் ஜியோ நெக்ஸ்ட், களத்திலிருக்கும் பிராண்டுகளை கதிகலங்கச் செய்யும் நம்பிக்கையில் இருக்கிறது. இன்டர் நெட் ஆஃப் திங்க்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மென்டெட் ரியாலிட்டி, மெட்டாவெர்ஸ், ஆட்டோபைலட் வாகனங்கள் என பல்துறை சார்ந்தும் தொழில்நுட்ப பாய்ச்சல்களுக்கு 5ஜி உதவும் என்பதால், அதிலும் பல திசைகளில் கால்பாவ ஜியோ தயாராக உள்ளது. அதாவது 5ஜி அனுகூலங்களுக்காக இதர தொழில் துறையின் காத்திருக்கையில், அத்துறை சார்ந்த புதிய ஏற்பாடுகளிலும் ஜியோ முன்கூட்டியே தயாராகி உள்ளது.

வாட்ஸ்-அப் நிறுவனத்துடன் இணைந்து மின் வணிக சந்தையில் ’ஜியோ மார்ட்’ நிறுவனம் புதிய தடம் பதிப்பதும் அவற்றில் அடங்கும். மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஆசிகளும் நிறைந்திருப்பதால் வாரியிறைத்த மூலதன செலவினத்தை எளிதில் ஈடுகட்டவும், புதிய வருமான உபாயங்களைக் கண்டடையவும் ஜியோ நம்பிக்கை கொண்டிருக்கிறது. ஆனால் அகலக்கால் வைப்பதில் இடறும் நடைமுறை சிக்கல்களை இம்முறை எப்படி ஜியோ எதிர்கொள்ளப் போகிறது என தெரியவில்லை. இதற்கு ஓர் உதாரணமாக 4ஜி அறிமுகமானபோது, நாளின் பிரைம் டைம் தருணங்களில் ஜியோ இணைய இணைப்பு திணறியதும், அதையொட்டிய வாடிக்கையாளர் அதிருப்தியும் ஜியோவை சங்கடத்தில் தள்ளியதைச் சொல்லலாம்.

எதிலும் நிதானமாக முன்னகரும் ஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், தனது 5ஜி சேவையைப் பிரத்யேகமாக வழங்கவும் ஏக நெருக்கடிகளுக்கு தற்போது ஆளாகியுள்ளது. அதற்குள் வெண்கலக் கடை யானையாக நாட்டின் இணைய சேவை சந்தையில் துவம்சம் செய்ய ஜியோ முடிவெடுத்திருக்கிறது.

2022 தீபாவளி முதல் 2023 தீபாவளி வரை நீளும் ஜியோவின் சரவெடிப் பண்டிகைக் கொண்டாட்டத்துக்கு, வாடிக்கையாளர்களின் எதிர்வினை என்ன என்பதும் அடுத்த ஓரிரு மாதங்களில் தெரிந்துவிடும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in