‘கரையான்களைப் போல காங்கிரஸை அரிக்கிறது முகஸ்துதி!’

கட்சியிலிருந்து விலகிய ஜெய்வீர் ஷெர்கில் சாடல்
ஜெய்வீர் ஷெர்கில்
ஜெய்வீர் ஷெர்கில்

காங்கிரஸ் கட்சியின் நிலவும் குழப்பங்களால், அடுத்தடுத்து பல தலைவர்கள் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகிவருகின்றனர். சமீபத்தில், காஷ்மீர் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சில மணி நேரங்களிலேயே அப்பதவியிலிருந்து விலகினார். அதேபோல, இமாசல பிரதேசத்தின் வழிகாட்டும் குழுவின் தலைமைப் பதவியிலிருந்து ஆனந்த் சர்மா விலகியிருக்கிறார்.

ஜி-23 குழுவைச் சேர்ந்த இந்தத் தலைவர்களைப் போல வேறு சிலர் கட்சித் தலைமை மீதான அதிருப்தியின் விளைவாகக் கட்சிப் பொறுப்புகளிலிருந்தும், சிலர் கட்சியிலிருந்தும் விலகிவருகின்றனர். அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில்.

39 வயதாகும் ஜெய்வீர், அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர்களில் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர். சமீபகாலமாக, கட்சி சார்பாக ஊடகங்களைச் சந்திப்பதிலிருந்து விலகியே இருந்தார். இந்நிலையில் ‘காங்கிரஸ் கட்சியின் முடிவுகளைத் தீர்மானிக்கும் தலைவர்களிடம், இளைஞர்களின் லட்சியத்துக்கும் நவீன இந்தியாவுக்கும் ஈடுகொடுக்கும் பார்வை இல்லை’ எனும் விமர்சனத்துடன் அவர் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார்.

இதுதொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 8 வருடங்களாக காங்கிரஸிலிருந்து நான் எதையும் எடுத்துச்செல்லவில்லை. மாறாக, கட்சிக்காகத்தான் செலவு செய்திருக்கிறேன். இன்றைக்கு, கட்சித் தலைமைக்கு நெருக்கமானவர்கள் என்பதால் சிலர் முன்பு நான் தலைவணங்கிச் செல்லுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறேன். இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. காங்கிரஸ் கட்சியை முகஸ்துதி கரையான்களைப் போல அரித்துக்கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

சோனியா காந்திக்கு எழுதியிருக்கும் ராஜினாமா கடிதத்தில், ‘கட்சி எடுக்கும் முடிவுகள் மக்கள் நலனையோ, நாட்டின் நலனையோ கருத்தில் கொள்ளவில்லை என்பது எனக்கு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. மாறாக, முகஸ்துதியில் ஈடுபடுகின்ற, கள நிலவரத்தை முற்றிலுமாகப் புறந்தள்ளுகின்ற, சுயநலத்தில் அக்கறை கொண்ட தனிநபர்களே இந்த முடிவுகளில் தாக்கம் செலுத்துகின்றனர். இதை தார்மிக ரீதியில் என்னால் ஏற்க முடியாது; தொடர்ந்து கட்சிப் பணியாற்றவும் முடியாது’ என ஜெய்வீர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவரையும் சந்திக்க கடந்த ஓராண்டாக முயற்சி எடுத்தும் அது நடக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in