பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கு: விடுதலையானவர்களுக்கு இனிப்பு பரிமாறிக் கொண்டாட்டம்!

பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கு: விடுதலையானவர்களுக்கு இனிப்பு பரிமாறிக் கொண்டாட்டம்!

2002-ல் நடந்த குஜராத் கலவரத்தின்போது, பில்கிஸ் பானு எனும் கர்ப்பிணியைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை ஒரு கும்பல் கொன்றது. இவ்வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். குஜராத் அரசு அமைத்த குழு தண்டனைக் குறைப்பு வழங்க முடிவெடுத்ததன் அடிப்படையில், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் விடுதலையாகினர்.

இந்நிலையில், கோத்ரா சிறையிலிருந்து வெளிவரும் அவர்களை அவர்களது உறவினர்கள் வரவேற்று இனிப்பு பரிமாறும் காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இனிப்பு வழங்குவதுடன் அவர்களில் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார் ஓர் இளைஞர். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகியிருக்கின்றன.

வழக்கின் பின்னணி

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது, (2002 மார்ச் 3-ம் தேதி) பில்கிஸ் பானுவும் அவரது குடும்பத்தினரும் ஒரு வயல் அருகே பதுங்கியிருந்தனர். அப்போது அங்கு சென்ற ஒரு கும்பல், 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவைப் பாலியல் வன்கொடுமை செய்தது. அவரது குழந்தை உட்பட 7 பேரைக் கொன்றது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. 2004-ம் ஆண்டில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். முதலில் அகமதாபாதில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. எனினும், சாட்சிகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என பில்கிஸ் பானு ஆட்சேபம் தெரிவித்ததால், வழக்கு விசாரணை மும்பைக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கில் மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், 2008 ஜனவரி 21-ல் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அவர்களைத் தவிர இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் போதிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். ஒருவர் வழக்கு விசாரணையில் இருந்தபோதே மரணமடைந்தார். 2018-ல் மும்பை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் 7 பேர் விடுதலையை ரத்து செய்தது.

பில்கிஸ் பானுவுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், அரசு வேலை மற்றும் வீடு வழங்குமாறும் 2019-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராதேஷ்யாம் ஷா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக முடிவெடுக்குமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக குஜராத் அரசு அமைத்த குழுவுக்கு கோத்ரா மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்தார். அக்குழு 11 பேருக்கும் தண்டனைக் காலத்தைக் குறைக்கலாம் என ஏகமனதாக முடிவெடுத்தது. இதையடுத்து, நேற்று அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

விடுதலையான ராதேஷ்யாம் ஷா, தனது குடும்பத்தைச் சந்தித்து புதிய வாழ்வைத் தொடங்கப்போவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இவ்வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுதலையாகிவிட்ட நிலையில், இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என பில்கிஸ் பானுவின் கணவர் யாகூப் ரசூல் தெரிவித்திருக்கிறார். “எங்களுக்கு இது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. நாங்கள் செய்ய விரும்புவதெல்லாம், கலவரத்தில் கொல்லப்பட்ட எங்கள் அன்புக்குரியவர்கள் இறைவனின் நிழலில் இளைப்பாறட்டும் என்று வேண்டுவதைத்தான். இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட எங்கள் மகள் உள்ளிட்ட ஒவ்வொருவரைப் பற்றியும் ஒவ்வொரு நாளும் நாங்கள் நினைத்துக்கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in