கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்: விசாரணை வளையத்தில் காதலன்!

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்: விசாரணை வளையத்தில் காதலன்!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி அபிதா(19) தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்தில் காதலன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அபிதாவின் தாய் தங்கபாய் முன்வைத்துள்ளார். இது குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், வாவறை பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பர்(56) கூலித் தொழிலாளி. இவரது மனைவி தங்கபாய். இந்தத் தம்பதியினரின் மூத்த இருமகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில் மூன்றாவது மகள் அபிதா களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வந்தார். இவரும் நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்தனர்.

இந்தக் காதல் விவகாரம் அந்த இளைஞரின் குடும்பத்திற்கு தெரியவரவே காதலுக்கு இளைஞரின் குடும்பத்தினர் எதிர்ப்புதெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அபிதாவின் காதலன் அவரிடம் பேசவில்லை. இதனால் கடந்த மூன்று மாதங்களாகவே கடுமையான மன உளைச்சலில் இருந்த அபிதா தன் குடும்ப உறுப்பினர்கள் யாரிடமும் பேசவும் இல்லை. தனிமையிலேயே இருந்து புலம்பிவந்தார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி வயிறு வலிப்பதாகச் சொன்ன அபிதா திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர் அபிதாவை மீட்டு மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அபிதா சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார். அபிதாவின் மரணத்திற்கு அவரது காதலன் திருமண ஆசை காட்டி பல ஊர்களுக்கும் அழைத்துச் சென்று சுற்றிவிட்டு, இப்போது திருமணம் செய்ய மறுத்தது தான் காரணம் என அபிதாவின் தாய் தங்கபாய், நித்திரவிளை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.இந்நிலையில், "என் மகளை திருமணம் செய்யாமல் இருக்க காதலனே விஷம் கொடுத்திருக்கலாம்" என தாய் தங்கபாய் இன்று செய்தியாளர்களிடம் கூறினார். இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அபிதாவின் காதலனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in