கரையை நெருங்கும் மேன்டூஸ்; ரயில், பேருந்து சேவை நிறுத்தம்: மின்சாரம் துண்டிப்பு?

கரையை நெருங்கும் மேன்டூஸ்; ரயில், பேருந்து சேவை நிறுத்தம்: மின்சாரம் துண்டிப்பு?

மேன்டூஸ் புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் எனவும் பேருந்து ரயில் சேவைகள் சூழலுக்கேற்ப தடை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான மேன்டூஸ் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேன்டூஸ் புயல் காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பூங்கா, விளையாட்டு மைதானம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் எனச் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இரவு நேரத்தில் அரசுப் பேருந்துகள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் புயல் கரையைக் கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட கடற்கரை ஓரப் பகுதிகளில் மட்டும் பேருந்துகள் இயங்காது என அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மெட்ரோ ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்கள் வழக்கம் போல இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில்வே நிர்வாகம் சார்பில், சிக்னல் கோளாறு ஏற்பட்டால் நேரம் மாற்றி அமைக்கப்படும் அல்லது ரயில்கள் ரத்து செய்யப்படும். மேலும் புயல் நேரங்களில் ரயிலின் வேகம் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், மேன்டூஸ் புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் எனத் தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது ஏற்படும் மின்சாரம் தொடர்பான பாதிப்புகளைச் சரிசெய்ய ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், புயலினால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க 11 ஆயிரம் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in