தமிழக அரசின் கல்வி டிவிக்கு உபகரணங்கள் வாங்குவதற்கான டெண்டர் நிறுத்தி வைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசின் கல்வி டிவிக்கு உபகரணங்கள் வாங்குவதற்கான டெண்டர் நிறுத்தி வைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசின் கல்வி டிவிக்கான உபகரணங்கள் வாங்குவதற்கான டெண்டரை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த மணிகண்டபூபதி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ``தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்காக கல்வி டிவி ஆரம்பித்துள்ளது. கல்வி டிவிக்கு தேவையான உபகரணங்கள், ஸ்டுடியோ, மெய்நிகர் ஸ்டுடியோ, அனிமேஷன் லேப் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. 

கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமை தொழில்நுட்ப அதிகாரி நியமிக்காமல் கல்வி தொலைக்காட்சிக்கான உபகரணங்கான, டெண்டர் விடுவது, பொருள்கள் வாங்குவது, நிறுவுவதால் பல லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படும்.  எனவே, கல்வி தொலைக்காட்சிக்கு பொருட்கள் வாங்கும் டெண்டரை செயல்படுத்த தடை விதித்து, தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு தேவையான பொருட்களை தேர்வு செய்த பிறகு டெண்டர் விட உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டிருந்தது. 

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கல்வி தொலைக்காட்சிக்கான உபகரணங்கள் வாங்குவதற்கான டெண்டரை நிறுத்தி வைக்க உத்தரவிடப்படுகிறது. மனு தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலர், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் இயக்குநர், அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவலர்  பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in