வட இந்தியர் பெயர்களின் பின்னொட்டுகள் சொல்வது என்ன?

வட இந்தியர் பெயர்களின் பின்னொட்டுகள் சொல்வது என்ன?

வட இந்தியர்களின் பெயர்களைப் பத்திரிகைகளில் வாசிக்கும்போதெல்லாம் வியப்படைவோம். காரணம், பெயர்களின் பின்னாலிருக்கும் பின்னொட்டு விதவிதமாக இருக்கும். அவை எல்லாமே சாதிகளைக் குறிக்கும் அடையாளங்கள் அல்ல. அவரவர்களுடைய சொந்த ஊரின் பெயர் அல்லது சொந்த ஊரில் ஓடிய நதியின் பெயர் அல்லது தொழிலின் பெயர்கள். பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் நிலவும் சில பெயர்களைப் பார்ப்போம்.

போர் செய்யும் படை வீரர்கள் ‘சத்திரியர்’கள் என்று அழைக்கப்பட்டனர். போர்க் காலத்தில் மட்டும்தான் போர் செய்ய முடியும். ஏனைய காலங்களில் அவர்கள் நிலங்களை உழுவது, கால்நடைகளை வளர்ப்பது போன்ற தொழில்களை, தேவைகளுக்கேற்ப செய்தனர். பஞ்சாப் மாநிலத்தில் சத்திரியர்களின் உட்பிரிவுப் பெயர்கள்தான் மல்ஹோத்ரா, அரோரா, கபூர், கன்னா, சோப்ரா, நந்தா, குல்லார், சோதி, பேடி(தி), சேகல், தாபர், மெஹ்ரா ஆகியவை. சத்திரியர் என்பதே ‘சத்ரி’ என்று மருவி அழைக்கப்படுகிறது.

மத்திய ஆசிய நாடுகளுடன் வாணிப உறவு வளர சத்திரியர்களுடைய பங்கு அளப்பரியது. நல்ல கல்வியும் திடகாத்திரமான உடலமைப்பும் ஒழுங்குக் கட்டுப்பாடும் கொண்ட சத்திரியர்கள் முகலாயர்கள், பிரிட்டிஷார் ஆட்சிகளிலும் உயர் பதவிகளை வகித்தனர்.

சீக்கியர்களுடைய உயர் குருமார்கள் பெரும்பாலும் சத்திரியர்களே. உதாரணமாக குரு நானக் தேவ் பேடி, குரு அங்கத் தேவ் திரேஹான், குரு அமர்தாஸ் பல்லா, குரு ராம்தாஸ் சோதி, குரு அர்ஜன் தேவ் சோதி, குரு ஹர்கோவிந்த் சோதி, குரு ஹர் ராய் சோதி, குரு ஹரி கிருஷண் சோதி, குரு தேஜ் பகதூர் சோதி, குரு கோவிந்த் சிங் சோதி போன்றோர். சத்திரியர்கள் அவர்கள் வசித்த பகுதிகளின் பெயர்களைப் பின்னொட்டாகச் சேர்த்துக்கொள்வதும் வழக்கம்.

அரோரா: இன்றைய பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள அரோர் நகரிலிருந்து பிற ஊர்களுக்குக் குடியேறியவர்கள். அந்த ஊர் சிந்து நதிக்கரையில், சுக்கூர் என்ற நகருக்கு அருகில் இருக்கிறது. 1947 பிரிவினைக்குப் பிறகு பெரும்பாலான அரோராக்கள் இந்தியாவில் குடியேறினர்.

கன்னா: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மாவட்டத்தில் கன்னா என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். கன்னா என்றால் கால் (25 சதவீதம்) என்றும் அர்த்தம். ஒரு பெரிய நகரத்தின் கால் பகுதி அளவுக்கே அந்த ஊர் இருந்ததால், அதைக் கன்னா என்று அழைத்தனர். கன்னாக்களும் அரோராக்களும் சத்திரியர்கள். ராஜேஷ் கன்னா, வினோத் கன்னா!

கபூர்: இவர்கள் சந்திரனின் வாரிசுகள் என்று அழைக்கப்படுவர். அதற்குக் காரணம் இவர்கள் வெண்ணிறத்தவர்கள். கபூர் என்பது தமிழில் ‘கற்பூரம்’ என்று அழைக்கப்படுவதுதான். கற்பூரமும் வெண்மை என்பதால் இவர்களை கபூர் என்றனர். ‘பஞ்சாபி சத்திரிய வம்சத்தின் கௌசல் கோத்திரத்தில் வந்தவர்கள் கபூர்’ என்று இந்திய சாதிகள் வரலாறு என்ற நூல் குறிப்பிடுகிறது. பஹாடி பரதாரி என்ற துணைச் சாதிப் பிரிவில் உள்ள இவர்கள், இந்து மதத்தையும் கலாச்சாரத்தையும் கடைபிடிக்கும் பஞ்சாபியர்.

மல்ஹோத்ரா: ‘மெஹ்ரோத்ரா’ என்ற சொல்லின் திரிபே மல்ஹோத்ரா. இனக்குழுவின் தலைவர் அல்லது முதன்மையானவர் என்று பொருள். மல்ஹோத்ரா இனக் குழுவின் முதல் தலைவர் மெஹர் சந்த். சந்த் என்றால் ‘சந்திரன்’.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் தேஷ்பாண்டே, தேஷ்முக், குல்கர்னி, பாட்டீல் என்ற பெயர்களைக் கேள்விப்படுவோம். தேஷ்பாண்டே என்ற பெயர் கர்நாடகத்திலும் உண்டு. மாவட்ட (பர்கானா) அளவில் அரசு ஆவணங்களைப் பராமரிக்கும் அதிகாரிகள் ‘தேஷ்பாண்டே’ என்று அழைக்கப்பட்டனர். அந்த பர்கானாவின் தலைவர் ‘தேஷ்முக்’ என்று அழைக்கப்பட்டார். அவரே கிராம அளவில் மட்டும் கணக்கெழுதுபவர் என்றால் ‘குல்கர்னி’. கிராம வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் பொறுப்பானவர் ‘பாட்டீல்’ (கிராமத் தலைவர்).

கோட்போலே: மேற்கு மகாராஷ்டிராவின் கடற்கரையோரம் வாழ்ந்த கோகணஸ்தா, சித்பவன் பிராமணர்களில் ஒரு பிரிவினர் ‘கோட்போலே’ என்று அழைக்கப்பட்டனர். இனிமையாகப் பேசும் நாவன்மை படைத்தவர்கள் என்று பொருள்.

மகாராஷ்டிராவில் ‘கர்’ என்ற பின்னொட்டுடன் முடியும் பெயர்கள் அதிகம். கவாஸ்கர், சோல்கர், கனிட்கர், டெண்டுல்கர், மங்கேஷ்கர், கிர்லோஸ்கர், வாங்கேகர் என்று. கர் என்ற பின்னொட்டுக்கு முன்னால் இருப்பது அவர்களுடைய மூதாதையர் ஊர். அரசியல் சட்ட மேதை அம்பேத்கர், மகாராஷ்டிரத்தின் ரத்னகிரி மாவட்டத்தின் அம்பேவாடா என்ற ஊரைச் சேர்ந்தவர். ‘அம்பாடாவேகர்’ என்றுதான் அவருடைய பெயரைத் தந்தை முதலில் பள்ளிக்கூடத்தில் பதிவு செய்தார். அவருக்கு ஆசிரியராக இருந்த கிருஷ்ணாஜி கேசவ் அம்பேத்கர் என்ற ஆசிரியருக்கு, அவர் மீது அன்பு அதிகம். உச்சரிக்க சிரமப்பட வேண்டாம் என்று ‘அம்பேத்கர்’ என்று பின்னொட்டை மாற்றினார் என்பார்கள். ஆனால், பாபா சாஹேப் அம்பேத்கர் என்ற பெயரே பின்னாளில் பிரபலமாகிவிட்டது.

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தின் காவஸ்வாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ‘காவஸ்கர்’ (கவாஸ்கர்) என்ற பெயர் வந்தது. இவை சாதிகளைக் குறிக்கும் பெயர்கள் அல்ல. பிரபல இந்திப் பாடகி லதா மங்கேஷ்கருடைய தந்தையாரின் பெயர் தீனா நாத் ஹர்திகர். அவர் தங்களுடைய சொந்த ஊரான மங்கேஷியைப் பெயருடன் சேர்த்து, தீனாநாத் மங்கேஷ்கர் என்று மாற்றிக்கொண்டார். அவருடை மகள் லதா மங்கேஷ்கர் ஆனார்.

சாவர்க்கர்: வினாயக் தாமோதர் சாவர்க்கரின் பின்னொட்டு ‘பாபட்’ என்பதுதான். கொங்கண் பிரதேசத்தில் குஹாகர் வட்டத்தில் சாவர்வாடி என்ற தங்களுடைய ஊர்ப் பெயரைச் சேர்த்தார், சாவர்க்கரின் தந்தை. ‘ஷேவாரி’ என்ற உயர் ரக பருத்தியைத் தரும் ‘சாவாரி’ அல்லது ‘சான்வாரி’ மரங்கள் அதிகம் வளர்ந்ததால், அந்த ஊர் ‘சாவர்வாடி’ என்றழைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in