
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் மூச்சுத்திணறி இறந்ததால் அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அய்யனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சிவசங்கரி(22). கர்ப்பிணியான இவர் பாவூர்சத்திரம் அடுத்துள்ள செல்வவிநாயகர்புரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் முதல் பிரசவத்திற்காக நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். அன்று இரவில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் திடீரென சிவசங்கரி மூச்சுத்திணறி இறந்ததால் அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இறந்த பெண்ணின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு கொண்டு செல்வது குறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் இறந்த பெண்ணின் உறவினர்களிடம் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதன் பின் சிவசங்கரியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தையொட்டி 30-க்கும் மேற்பட்ட போலீஸார் மருத்துவமனை பகுதியில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.