
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தங்களது திருமணத்தை அனுமதிக்க உத்தரவிடக்கோரி தன் பாலின ஜோடி ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பிற உயர்நீதிமன்றங்களில் உள்ள தன் பாலின திருமண வழக்குகளை விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.
அந்த மனுவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட பெஞ்ச் கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்தது.விசாரணையின் போது, தன் பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிப்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில், தன் பாலின திருமணம் என்பது இந்திய குடும்ப அமைப்பு என்ற கருத்துடன் ஒத்து போகாது. தன் பாலின திருமணத்தை சட்டப் பூர்வமாக்கக்கூடாது. இது தொடர்பாக 7 மாநிலங்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளன. ராஜஸ்தான், ஆந்திரா, அசாம் மாநிலங்கள் இதை எதிர்த்துள்ளன என குறிப்பிட்டுள்ளது.
பின்னர் உச்ச நீதிமன்றம் தனது இறுதி உத்தரவை கடந்த மே 11-ம் தேதி ஒத்திவைத்தது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்த நாட்டில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.