‘தியேட்டருக்கு தின்பண்டம் எடுத்துச் செல்லலாமா?’

உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
‘தியேட்டருக்கு தின்பண்டம் எடுத்துச் செல்லலாமா?’

’சினிமா பார்க்க திரையரங்குகளுக்கு செல்லும் ரசிகர்கள் கையோடு வெளி உணவுகள், தின்பண்டங்கள் மற்றும் குடி நீர் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாமா’ என்ற சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய கேள்விக்கு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்று பதில் தந்துள்ளது.

சினிமா பார்ப்பதற்காக திரையரங்குகளை நாடுவது, இன்றும் ரசிகர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்காகவே நீடிக்கிறது. வீட்டின் வரவேற்பறையை ஆக்கிரமித்த தொலைக்காட்சி சேனல்கள், ஓடிடியில் குவியும் ஆயிரக்கணக்கான படங்கள் மற்றும் வலைத்தொடர்கள் ஆகியவற்றின் மத்தியிலும் சாமானிய ரசிகரை திரையரங்குகளே ஈர்த்து வருகின்றன.

’திரையரங்குகளின் அகன்ற திரைகள், ஒலி ஒளி அமைப்பு, நண்பர்கள், குடும்பத்தார் மற்றும் சக ரசிகர்களுடன் கூடி திரைப்படத்தை சிலாகிக்கும் வாய்ப்பு’ ஆகியவற்றுடன் ’வீட்டில் அடைந்து கிடப்பதிலிருந்து கிடைக்கும் விடுதலை’.. உள்ளிட்ட காரணங்களால் திரையரங்குகளை நேசிக்கும் ரசிகர்களே நம்மில் அதிகம். ஆனால் அப்படியான ரசிகரை திரையரங்குகள் நடத்தும் விதமும் கேள்விக்குரியது!

மணிக்கு என நிர்ணயிக்கப்படும் வாகன நிறுத்த கட்டணத்தில் தொடங்கி, திரையரங்குகளில் விற்கப்படும் குடிநீர் முதல் தின்பண்டம் வரையிலான செலவினங்களால், கிட்டத்தட்ட ஒரு வழிப்பறிக்கு ஆளான அனுபவத்துடன் ரசிகரின் வீடு திரும்பல் நடக்கும். அம்மாதிரியானவர்கள் மத்தியில், வெளி உணவுகள், குடிநீர் மற்றும் தின்பண்டங்களை திரையரங்குகளில் அனுமதிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் நீண்ட காலமாகவே நீடிக்கிறது. இன்று உச்ச நீதிமன்றத்தில் அரங்கேறிய வழக்கு ஒன்றின் தீர்ப்பும் இதையொட்டியே அமைந்தது.

2018-ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ’குடிநீர் மற்றும் வெளி தின்பண்டங்களை திரையரங்குகள் அனுமதிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை தாக்கல் செய்யப்பட்ட மனுதாரருக்கு சாதகமான தீர்ப்பை ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் வழங்கியது. வெளி உணவுகளை திரையரங்கில் அனுமதித்தால் நாங்கள் நட்டமடைவோம் என்று புலம்பிய தியேட்டர் உரிமையாளர்கள், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

அந்த வழக்கில் தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பணமதிப்பிழப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட கனமான வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானதன் வரிசையில், இன்று ’சுவையான’ தீர்ப்பு வெளியாகி உள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது, ’நாட்டில் திரையரங்குகள் பராமரிக்கப்படும் விதம், ரசிகர்கள் அங்கே நடத்தப்படும் விதம், ஜிலேபி மற்றும் சிக்கன் உடன் செல்லும் ரசிகர் அவற்றை ருசித்த கையோடு திரையரங்கில் என்ன செய்வார்..’ என்பது போன்ற சுவாரசியமான விவாதங்கள் அரங்கேறின. அவற்றின் இறுதியாக நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் பின்வரும் கருத்துக்கள் முக்கியமாக இடம்பெற்றிருந்தது:

’திரையரங்கில் வெளியார் உணவுகளை தாராளமாக அனுமதிக்கலாம். ஆனால் அதனை முடிவெடுப்பது திரையரங்கின் உரிமையாளராகவே இருக்க வேண்டும். திரையரங்கு என்பது தனியார் இடம். அதன் உரிமையாளருக்கு எதை அனுமதிக்க வேண்டும் என்று முடிவெடுக்க அதிகாரம் உண்டு. மற்றபடி, திரையரங்குகளில் சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்க வசதி செய்யப்படுவது அவசியம். குழந்தைகளுடன் வருவோரிடம், குழந்தைக்கு அத்தியாவசியமான உணவு பொருட்களை நிச்சயம் அனுமதிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கருத்துக்கள் நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சமாக அமைந்திருந்தன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in