அடுத்த அரசியல் பரபரப்பு... மீண்டும் உச்சநீதிமன்ற விசாரணையில், குஜராத் போலி என்கவுன்டர் வழக்கு!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

குஜராத்தில் 2002 முதல் 2006 வரை நடந்ததாகக் கூறப்படும் போலி என்கவுன்டர்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரிய 2 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளன.

பத்திரிகையாளர் பி.ஜி.வர்கீஸ் மற்றும் பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், ஜாவேத் மனைவியும் நடிகையுமான ஷப்னம் ஆஸ்மி ஆகியோர் 2007-ல் தாக்கல் செய்த தனித்தனி மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த மனுக்கள் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தற்போது விசாரணைக்கு வந்தது.

இந்த விவகாரத்தில் சில தனிப்பட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோகத்கி என்பவரின் உடல்நலக் கோளாறு காரணமாக, விசாரணையை ஒத்திவைக்கக் கோரப்பட்டுள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். ஆனால் இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்தார்.

என்கவுன்டர்
என்கவுன்டர்

2002 முதல் 2006 வரை குஜராத்தில் நடந்ததாகக் கூறப்படும் 17 போலி என்கவுன்ட்டர் வழக்குகளை விசாரிக்கும் கண்காணிப்புக் குழுவின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பேடி நியமிக்கப்பட்டிருந்தார். 2019-ம் ஆண்டு சீலிடப்பட்ட கவரில் அவர் தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். இந்த அறிக்கை ஆராயப்படாது இருப்பதாகவும் தற்போது வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக குஜராத் அரசு சார்பில், உச்சநீதிமன்றம் பெறும் இத்தகைய தகவல்கள் மனுதாரர்களுடன் பகிரப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. வழக்கு தொடுத்திருக்கும் அவர்களின் நோக்கங்கள் கடும் ஐயத்துக்கு உரியவை என்றும் குஜராத் மாநில அரசு குற்றம்சாட்டியிருந்தது. ஜனவரி 9, 2019 அன்று, அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான பெஞ்ச், குழுவின் இறுதி அறிக்கையை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்ற குஜராத் அரசின் கோரிக்கையை நிராகரித்து, அதை மனுதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டது.

இதற்கிடையே இந்த மனுக்கள் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். குஜராத் போலி என்கவுன்டர் வழக்கு விசாரணைக்கு வரும்போது, தற்போதைய அரசியல் களத்திலும், எதிர்வரும் 2024 மக்களவை தேர்தல் பிரச்சார களத்திலும் சூறாவளியை அது உருவாக்கக்கூடும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in