தரைமட்டமாக்கத் தயாராக இருந்த புல்டோசர்; கடைசி நேரத்தில் தப்பிய கோவா ஹோட்டல்!

பாஜக தலைவர் சோனாலி போகாட் கொல்லப்பட்டது இந்த ஹோட்டலில்தான்...
தரைமட்டமாக்கத் தயாராக இருந்த புல்டோசர்; கடைசி நேரத்தில் தப்பிய கோவா ஹோட்டல்!

கோவாவில் உள்ள கர்லீஸ் ஹோட்டல், விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி அதை இடிக்க தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையால் அதை இடிக்கும் பணிகள் கடைசி நேரத்தில் நிறுத்திவைக்கப்பட்டன.

வடக்கு கோவா மாவட்டத்தின் அஞ்சுனா பகுதியில் உள்ள கர்லீஸ் ஹோட்டலில் ஹரியாணாவைச் சேர்ந்த பாஜக தலைவரும் நடிகையுமான சோனாலி போகாட் கடந்த மாதம் கொலைசெய்யப்பட்டார். மதுவில் போதைப் பொருள் கலந்து அவரை வலுக்கட்டாயமாகக் குடிக்கச் செய்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் அவரது உதவியாளர்கள் இருவர், அந்த ஹோட்டலில் இயங்கிவந்த கிளப்பின் உரிமையாளர், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்ட 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த ஹோட்டல் கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்தன. 2016-லேயே இதுதொடர்பான புகாரை விசாரித்த கோவா கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் அந்த ஹோட்டலை இடிக்க உத்தரவிட்டிருந்தது. சோனாலி போகாட் கொலை செய்யப்பட சம்பவத்தைத் தொடர்ந்து அந்த ஹோட்டலை இடிக்க கோவா அரசு முடிவுசெய்தது. அதை எதிர்த்து ஹோட்டல் உரிமையாளர் தொடர்ந்த மனுவை தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டது.

இதையடுத்து அந்த ஹோட்டலை இடிக்கும் பணிகளை கோவா மாநில அரசு இன்று காலை தொடங்கியது. இதற்காக புல்டோசர் கொண்டுவரப்பட்டு ஹோட்டல் முன் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையே, ஹோட்டலை இடிக்கும் பணிகளை நிறுத்திவைக்குமாறு ஹோட்டல் உரிமையாளர் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக இன்று காலை உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, ஹோட்டலை இடிக்க இடைக்காலத் தடை விதித்தது. எனினும், குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள இடம் தவிர மற்ற இடங்களில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட இடங்களை இடிக்கலாம் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.

அதுவரை வணிகரீதியான செயல்பாடுகளை நிறுத்திவைக்குமாறு ஹோட்டல் மற்றும் மதுபான விடுதியின் உரிமையாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in