‘மேலும் 6 மாதம் அவகாசமா? அதெல்லாம் முடியாது’ அதானி முறைகேடு விசாரணை விவகாரத்தில் அதிரடித்த உச்ச நீதிமன்றம்!

ஹிண்டன்பர்க் ஆய்வும் அதானி குழுமமும்
ஹிண்டன்பர்க் ஆய்வும் அதானி குழுமமும்

இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமம் மேற்கொண்டதாக ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை எழுப்பிய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு, ’செபி’ கூடுதல் அவகாசம் கோரியதை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், இந்தியாவின் அதானி குழும நிறுவனங்கள் மீது மிகப்பெரும் குற்றச்சாட்டினை சுமத்தியது. அதில், அதானி நிறுவனங்கள் பத்தாண்டுக்கும் மேலாக பங்குச்சந்தையில் பல்வேறு முறைகேடுகளை நடத்தியது தொடர்பாக விசாரிக்கும்படி, பங்கு பரிவர்த்தனை வாரியமான ’செபி’ அமைப்பின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது. மேலும் அந்த விசாரணைக்கு 2 மாதம் காலக்கெடுவும் விதித்திருந்தது.

தற்போது மேற்படி விசாரணைக்கான அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்குமாறு செபி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று அதனை விசாரித்தது. முடிவில், செபியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. தொடர்ந்து அவகாசம் கோரி செபி தரப்பில் மன்றாடவே, 3 மாத அவகாசத்தை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே காங்கிரஸ் மனுதாரர் தரப்பிலான வழக்கறிஞர், பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான ’செபி’யின் விசாரணை குறித்து ஐயத்துக்குரிய சில கேள்விகளை முன்வைத்தார். இதற்கு நீதிபதிகள் கண்டிப்பு தெரிவித்தனர். ’ஆதாரமின்றி வைக்கப்படும் செபி மீதான குற்றச்சாட்டுகள், நாட்டின் பங்குச்சந்தைகள் போக்கினை தடம்புரளச் செய்யக்கூடியது’ என அறிவுறுத்தினர்.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதை அடுத்து, அதலபாதாளத்தில் சறுக்கிய அதானி குழும பங்குகள், இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த சில தினங்களாக மீண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in