பிஹார் அரசின் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பிஹார் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பிஹாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு அம்மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பினை நடத்தி வருகிறது. இதற்கு எதிரான மனுக்களை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. இந்த மனுக்களில் எந்த தகுதியும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றத்தை அணுகுவதற்கான சுதந்திரத்துடன் அவற்றை தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பில், “இது ஒரு விளம்பர வழக்கு. இப்படிப்பட்ட ஜாதியினருக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாங்கள் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும். மன்னிக்கவும், இதுபோன்ற உத்தரவுகளை எங்களால் வழங்க முடியாது. எனவே இதுபோன்ற விளம்பர மனுக்களை ஏற்க முடியாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனு உட்பட மூன்று மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரர்கள் தகுந்த தீர்வுக்காக பாட்னா உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறியது. அனைத்து மனுக்களும் சட்டத்தில் உரிய பரிகாரம் தேடும் உரிமையுடன் திரும்பப் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்
மனுதாரர்களில் ஒருவர் இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரிக்க குறிப்பிட்டதை அடுத்து, ஜனவரி 20-ம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் ஜனவரி 11-ம் தேதி கூறியது.