உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை: இன்று முதல் நேரடி ஒளிபரப்பில் காணலாம்!

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை: இன்று முதல் நேரடி ஒளிபரப்பில் காணலாம்!

அரசியல் சாசன அமர்வுகளின் விசாரணைகளை இன்று முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யத் தொடங்கியது உச்சநீதிமன்றம்.

அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய விஷயங்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மூன்று அரசியல் சாசன அமர்வுகள் உள்ளன. இந்த மூன்று அமர்வுகளின் விசாரணையும் இன்று முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் இரு பிரிவினரும் தாக்கல் செய்த பல மனுக்கள் மீதான மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி தொடர்பான விஷயத்தை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான இரண்டாவது அரசியல் சாசன அமர்வு இன்று விசாரித்து வருகிறது. இந்த அமர்வின் விசாரணை நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மற்ற இரு அமர்வுகளின் விசாரணையும் நேரடியாக ஒளிபரப்பாகி வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு, டெல்லி மற்றும் மத்திய அரசு தொடர்பான வழக்கு ஆகியவையும் இன்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

சிவசேனா மீதான உரிமைகோரல் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே கட்சி மீதான உரிமைகோரல் தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

தகுதி நீக்கம், சபாநாயகர் மற்றும் ஆளுநரின் அதிகாரம் மற்றும் நீதித்துறை மறுஆய்வு தொடர்பான அரசியலமைப்பின் 10 வது அட்டவணை தொடர்பான முக்கியமான அரசியலமைப்பு சிக்கல்களை இந்த மனுக்கள் எழுப்புகின்றன என்று நீதிமன்றம் கூறியது.

இந்தியத் தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தலைமையிலான அமர்வு, நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலை-ஸ்ட்ரீம் செய்ய யூடியூப்பைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக உச்ச நீதிமன்றம் விரைவில் சொந்தமாக பிரத்யேக தளம் ஒன்றினை தொடங்கும் என்று நேற்று கூறியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in