உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் தமிழில் தீர்ப்பு!

உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் தமிழில் தீர்ப்பு!

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இன்று முதல் தமிழிலும்  வெளியாகும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்து தமிழ் காமதேனு செய்தி பிரிவிடம் அவர் பேசுகையில்,  "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்படும் என தலைமை நீதிபதி கூறியதாக 2019 ஜூலை மாதம் 3-ம் தேதி நாளேடுகளில் செய்தி வெளியானது. இந்தி, தெலுங்கு, கன்னடம், அஸ்ஸாமிஸ், ஒடியா ஆகிய 5 மொழிகளில் மட்டும் அது வெளியாகும் என்று தலைமை நீதிபதி கூறியிருந்தார். 

அந்தந்த மாநிலங்களின்  உயர்நீதிமன்றங்களிலிருந்து உச்சநீதிமன்றத்துக்கு செய்யப்பட்ட மேல்முறையீடுகளின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு இந்த மாநில மொழிகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தலைமை நீதிபதி கூறியிருந்தார். தெலுங்கும், கன்னடமும் சேர்க்கப்பட்டு செம்மொழியான தமிழ் விடுபட்டிருப்பது அநீதி என சுட்டிக்காட்டி அன்றைய நாளிலேயே நான் நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்தேன். 

ரவிக்குமார் எம்.பி
ரவிக்குமார் எம்.பி

அத்துடன் அப்போதைய சட்ட அமைச்சர்  ரவிசங்கர் பிரசாத் அவர்களை சந்தித்து கோரிக்கை கடிதம் ஒன்றையும் அளித்தேன். ``உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளில் அளிக்கும்போது அந்தப் பட்டியலில் தமிழ் மொழியையும் சேர்க்கவேண்டும்” என அதில் வேண்டுகோள் விடுத்திருந்தேன். நிச்சயம் அதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் என்னிடம் உறுதி கூறினார். 

ஜனவரி 26 முதல் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகள் சிலவற்றில் வெளியாகும் எனத் தலைமை நீதிபதி கூறியுள்ளார். அந்தப் பட்டியலில் தமிழும் இடம் பெற்றிருக்கிறது. 2019-ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை இன்று நிறைவேறியுள்ளது" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in