மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் நாங்களே முடிவெடுப்போம்: பேரறிவாளன் விவகாரத்தில் நீதிபதிகள் அதிரடி!

மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் நாங்களே முடிவெடுப்போம்: பேரறிவாளன் விவகாரத்தில் நீதிபதிகள் அதிரடி!

" பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்கவில்லை என்றால் அரசியல் சாசனம், தீர்ப்புகள் அடிப்படையில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கும்" என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பிணையில் உள்ள பேரறிவாளன் தன்னை விடுவிக்க கோரி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, "இந்த விவகாரத்தில் முடிவெடுக்க ஆளுநர், பிரதமருக்கு தகவல் அனுப்பினார், எனவே குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்" என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு, கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்," இந்த விவகாரத்தில் அமைச்சரவை முடிவு மீது ஏன் ஆளுநர் முடிவெடுக்கவில்லை?" என கேள்வி எழுப்பினர்.

பேரறிவாளன்
பேரறிவாளன்

மேலும், " குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்கவே தேவையில்லை என்பதே எங்களது கருத்து. சட்டம் தெளிவாக உள்ளது" என தெரிவித்த நீதிபதிகள்," அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் நடவடிக்கை எடுத்திருக்கலாம்" என்று கருத்து தெரிவித்தனர். அப்போது, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், சட்ட சிக்கல் இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்," பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவை முடிவு, குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தால், அவர் கருணை வழங்கலாம், அல்லது நிராகரிக்கலாம், அல்லது ஆளுநரையே முடிவெடுக்க சொல்லலாம், இது தானே நடைமுறை. இது சிக்கல் இல்லாத நடைமுறை தானே? இதில் என்ன சிக்கல் உள்ளது?" என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

"கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன் சிறையில் உள்ளார். அவரது நடத்தை நன்றாக இருந்ததால் அவருக்கு ஜாமீன் வழங்கினோம். இதில் முடிவெடுக்க என்ன சிக்கல் உள்ளது?" என கேள்வி எழுப்பினர். " எனவே, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், வாதிட ஒன்றும் இல்லை என மத்திய அரசு சொன்னால், அரசியல் சாசனம், உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும்" என நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து, வழக்கு விசாரணை, வரும் செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in