`பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை'- கண்ணியத்துடன் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

`பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை'- கண்ணியத்துடன் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!
உச்ச நீதிமன்றம்

பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும் எனவும், அவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாலியல் தொழிலாளர்களுக்கு அரசின் எவ்வித அடையாளச் சான்றும் கிடைக்காததால். அவர்களுக்கு அரசின் சலுகைகள் கிடைப்பதில்லை. பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் உள்ளிட்ட அரசின் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி நாகேஸ்வரராவ், பி.ஆர் கவாய் மற்றும் ஏ.எஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. விசாரணை முடிவுற்ற நிலையில் அதன் தீர்பு நேற்று வழங்கப்பட்டது. அதில், “தமிழகத்தில் 87 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் 86,000க்கும் மேற்பட்டோருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதுபோல அனைத்து மாநிலங்களும் பாலியல் தொழிலாளர்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் ரேஷன் கார்டு வழங்க வேண்டும்“ என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

முந்தைய விசாரணைகளில், “கரோனா காலகட்டத்தில் அதிக பாதிப்புக்கு உள்ளானவர்கள் பட்டியலில், பாலியல் தொழிலாளர்களும் உள்ளனர். இவர்களின் பாதுகாப்பு `கேள்விக்குறியாகவே உள்ளது. பாலியல் தொழிலாளர்களின் தொழில் குறித்த தகவல்களை மற்றும் அவர்களின் தனிப்பட்ட தகவல்களையும் ரகசியமாக வைத்திருப்பது முக்கியம். பாலியல் தொழிலாளர்களின் அடையாளத்தை தெரிவிக்காமல் மாநில அரசுகள் தொடர்ந்து அவர்களுக்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும்” என்றும் கூறியிருந்தனர்.

நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வில், “தொழிலை வைத்து யாரையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்களும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும். அதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது. இந்த அடிப்படையில், பாலியல் தொழிலாளர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் கருதுகிறது. கரோனா பாதிப்பின்போது இந்தியாவே 9 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க வேண்டும்” என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in