நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கைவிடப்பட்டது: நிம்மதியடைந்த பிரசாந்த் பூஷண்!

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது 2009-ல் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் கைவிட்டிருக்கிறது.

2009-ல் ‘தெஹெல்கா’இதழுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் தலைமை நீதிபதிகள் குறித்து பிரசாந்த் பூஷண் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகின. ‘இந்தியாவின் தலைமை நீதிபதிகளாகப் பதவிவகித்த கடைசி 16 பேரில், பாதிப் பேர் ஊழல்வாதிகள்’ என்று அந்தப் பேட்டியில் கூறியிருந்த பிரசாந்த் பூஷண், தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, பிரசாந்த் பூஷண் மீதும் ‘தெஹல்கா’வின் ஆசிரியராக இருந்த தருண் தேஜ்பால் மீதும் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, 2009 நவம்பரில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, ‘நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்துவது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது’ என பிரசாந்த் பூஷண் விளக்கமளித்தார்.

‘ஊழல் எனும் வார்த்தையை, வெறுமனே நிதிசார்ந்த முறைகேடு எனும் அர்த்தத்தில் மட்டும் பயன்படுத்தவில்லை. நீதித் துறை அமைப்பையும், குறிப்பாக நான் அங்கம் வகிக்கும் உச்ச நீதிமன்றத்தையும் ஆதரிக்கிறேன். நான் முழுமையான நம்பிக்கை வைத்திருக்கும் நீதித் துறையின் மாண்பைக் குலைக்கும் எண்ணம் எனக்கு இல்லை’ என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதேபோல், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ஏ.போப்டே குறித்து 2020-ல் சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்ததால், பிரசாந்த் பூஷண் மீது உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்தது.

‘நீதியைப் பெறும் அடிப்படை உரிமையைக் குடிமக்களுக்கு மறுக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தை பொதுமுடக்க நிலையில் வைத்திருக்கும் தலைமை நீதிபதி, நாக்பூர் ராஜ்பவனில், பாஜக தலைவர் ஒருவருக்குச் சொந்தமான 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்கை - தலைக்கவசம், முகக்கவசம் இல்லாமல் ஓட்டுகிறார்’ என அந்த ட்வீட்டில் பிரசாந்த் பூஷண் குறிப்பிட்டிருந்தார்.பைக் மீது அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அமர்ந்திருக்கும் படத்தையும் அவர் இணைத்திருந்தார்.

அந்த ட்வீட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அவரைப் பல முறை வலியுறுத்தியது. எனினும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், தனது விமர்சனம் அரசமைப்புச் சட்டப்படி சரியானது என்றும் அவர் விளக்கமளித்தார். இந்த வழக்கில் 2020 ஆகஸ்ட் 31-ல், அவருக்கு 1 ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், 2009-ல் பிரசாந்த் பூஷண் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கைக் கைவிடுவதாக உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது. அவரது பேட்டியைப் பிரசுரித்த ‘தெஹல்கா’ ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான வழக்கையும் இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு ரத்து செய்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in