`விவாதிக்கலாம், முடிவெடுக்கக் கூடாது'- மேகேதாட்டு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நிபந்தனை

மேகேதாட்டு
மேகேதாட்டு

காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகேதாட்டு அணை திட்டம் குறித்த கர்நாடகத்தில் வரைவு திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் 22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்த கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கை குறித்த விவாதம் நடைபெறும் என்று வேளாண்மை ஆணைய தலைவர் தெரிவித்திருந்தார். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகேதாட்டு அணை விவகாரத்தை விவாதிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு ஏற்கெனவே கடும் எதிர்ப்பு பதிவு செய்து வருவதால் கடந்த மூன்று முறை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக விவாதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனால் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்கலாம். ஆனால் முடிவெடுக்க கூடாது என்று தெரிவித்துள்ளது. மேலும், மேகேதாட்டு குறித்த விரிவான திட்ட அறிக்கை குறித்து ஆய்வு செய்து விவாதிக்கலாம். ஆனால் முடிவு எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று டெல்லி சென்று இது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து இதுகுறித்து முறையிடப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

ஆனாலும் கர்நாடகத்தின் வரைவுத் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது தமிழகத்திற்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஆணைய கூட்டத்தில் விவாதம் நடந்தாலே அது கர்நாடகத்துக்கு சாதகமாக முடியும் சூழல் தற்போது உள்ளது என்பதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in