பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிம்மதி: இரு விரல் பரிசோதனைக்கு உச்ச நீதிமன்றம் தடை

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிம்மதி: இரு விரல் பரிசோதனைக்கு உச்ச நீதிமன்றம் தடை

பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இனி இரு விரல் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு இன்னும் இரண்டு விரல் சோதனை நடத்தப்படுவதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்த சோதனையை நடத்துபவர்கள் தவறான நடத்தைக்கான குற்றவாளிகளாக கருதப்படுவார்கள் என்று இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்," பாலியல் பாதிப்புக்கு உள்ளானவரின் பாலியல் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இன்றும் இதுபோன்ற சோதனை நடத்தப்படுவது வருத்தமளிக்கிறது. இருவிரல் சோதனை அறிவியல் பூர்வமானது இல்லை. இந்த பரிசோதனை என்பதே பெண்களை மீண்டும் பலிவாங்குவது மற்றும் மீண்டும் காயப்படுத்துவது மட்டுமே. எனவே, இருவிரல் சோதனைக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதை மத்திய, மாநில சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும். மேலும் இதனை உறுதி செய்ய அனைத்து மாநில காவல் துறை தலைவர்களும் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான பயிலரங்குகளை நடத்த அறிவுறுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

இருவிரல் பரிசோதனை என்பது பெண்களின் பாலுறுப்புக்குள் இருவிரல்களை விட்டு அவர்களது கன்னித்திரை கிழியாமல் சரியாக இருக்கிறதா என்று செய்யப்படும் சோதனை முறையாகும்." இந்த சோதனை ஆணாதிக்க மனோபாவம் கொண்டது எனவும், இதில் எந்த அறிவியல் தன்மையும் இல்லை" என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in