
இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு, நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறையினர் 3-ம் முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டிருந்தனர். இந்த சோதனையின் போது கைபற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையிலும், பல்வேறு பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர், மத்திய குற்ற புலனாய்வு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக செந்தில் பாலாஜின் சகோதரர் அசோக்குமாரிடம் விசாரணை நடத்த நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறையினர் ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பியிருந்தனர்.
ஆனால் இந்த சம்மனை ஏற்ற அசோக்குமார் இரு முறையும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் ஜூலை 27-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அசோக்குமாருக்கு 3-வது முறையாக வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்மனுக்கும் அவர் ஆஜராகவில்லை எனில், நீதிமன்றம் மூலம் அதற்கான நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.