கோடைவெயிலால் தக்காளி மகசூல் 75% குறைந்தது: ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரிப்பு

தக்காளி
தக்காளிகோடைவெயிலால் தக்காளி மகசூல் 75% குறைந்தது: ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரிப்பு

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தமிழகத்தில் தக்காளி மகசூல் 75 சதவீதம் குறைந்தது. அதேநேரத்தில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின்  தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி பழங்கள் கிலோ ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனையாகிறது.

அன்றாட சைவ உணவுகளிலும், அசைவ உணவுகளிலும் தக்காளி தவிர்க்க முடியாததாகும். ஆனால், தக்காளி உற்பத்தியும், அதன் விலையும் நிலையற்றது. எளிதில் அழுகக்கூடியது, சேதமடையக்கூடியவை என்பதால் தக்காளி விலை அன்றாடம் மாறுபடுகிறது. 

கடந்த சில வாரங்களுக்கு முன் கோடை மழை தொடர்ந்து பெய்ததால் தக்காளி உற்பத்தி குறைந்து அதன் விலை அதிகரித்தது. கடந்த சில வாரமாக தக்காளி உற்பத்தி அதிகரித்து அதன் விலை கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனையானது.

இந்நிலையில் தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் தக்காளி மகசூல் வெகுவாக  குறைந்துள்ளது. அதனால் வெளிமாநில தக்காளி  வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மதுரை மாட்டுத்தாவணி காய்கறி வியாபாரிகள் சங்கத்தலைவர் சின்னமாயன் கூறுகையில், ‘‘தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கோடை வெயில் அதிகரிப்பால் தக்காளி மகசூல் 75 சதவீதம் குறைந்துள்ளது. அதனால், ஆந்திரா, கர்நாடகா தக்காளிதான் தற்போது அதிகளவு தமிழகத்திற்கு விற்பனைக்கு வருகிறது. 

தற்போது அந்த மாநிலங்களிலும் மழை அதிகமாக பெய்வதால் அவர்களுக்கே தக்காளி பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியிருக்கிறது. அதனால், 15 கிலோ பொடி தக்காளி ரூ.250, 15 கிலோ முதல் தர தக்காளி ரூ.450 வரை விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் இந்த தக்காளிகள் கிலோ ரூ.25 முதல் ரூ.40 வரை விற்பனையாகிறது" என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in