தற்கொலைக்கு முயன்ற வாலிபர்... காதலியை அழைத்து வந்த போலீஸ்: திருமணத்துக்காக நடந்த போராட்டம்

தற்கொலைக்கு முயன்ற வாலிபர்... காதலியை அழைத்து வந்த போலீஸ்: திருமணத்துக்காக நடந்த போராட்டம்

காதலியைத் திருமணம் செய்து வைக்கக் கோரி உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதன் காரணமாக உயர்மின்னழுத்தம் துண்டிக்கப்பட்டதில் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பல மணி நேரம் மின்சாரம் தடைபட்டது

சென்னை குரோம்பேட்டை அடுத்த ராதா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் (19). பெயிண்டிங் வேலை செய்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த பதினாறு வயதான 11-ம் வகுப்பு மாணவி ஒருவரை இரண்டு வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தனது காதலியிடம் கூறியிருக்கிறார். அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று காலை 8 மணி அளவில் குரோம்பேட்டை பச்சை மலை அருகே உள்ள உயர்மின் அழுத்தக் கோபுரத்தின் மீது ஏறி காதலியைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் எனத் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அப்பகுதியினர் அவரை சமாதானப்படுத்த முயன்றும் முடியாததால் குரோம்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் மின் வாரியத்திற்குத் தகவல் தெரிவித்து மின் இணைப்பைத் துண்டித்தனர். தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

காதலியுடன் சேர்த்து வைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அந்த இளைஞர் தொடர்ந்து மிரட்டல் விடுத்துக் கொண்டே இருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றும் அவர் கீழே இறங்குவதாக இல்லை. கிஷோரின் பெற்றோரை வரவழைத்த காவல்துறையினர் மீண்டும் அந்த இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு மணிநேரத்திற்கு மேலாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றும் பலன் அளிப்பதாக இல்லை. பின்னர் அவரது காதலியை அழைத்து வந்து திருமணம் செய்து வைப்பதாகப் பெற்றோர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து உயர் மின்னழுத்த கோபுரத்திலிருந்து அவர் கீழே இறங்கினார். இளைஞரின் தற்கொலை மிரட்டல் காரணமாக மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டதையடுத்து, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்கொலை மிரட்டல் விடுத்த கிஷோர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in