தற்கொலை நாடகம் அம்பலமானது: மாணவியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்க விட்ட கல்லூரி முதல்வர்

கல்லூரி மாணவி கொலை
கல்லூரி மாணவி கொலைதற்கொலை நாடகம் அம்பலமானது: மாணவியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்க விட்ட கல்லூரி முதல்வர்

கர்நாடகாவில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடிய கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்டார். அந்த மாணவியை பலாத்காரம் செய்து பின் கொலை செய்து தூக்கில் அவர் தொங்க விட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் கோனவட்லா கிராமத்தைச் சேர்ந்த 17வயது மாணவி தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த கல்லூரியின் முதல்வராக இருக்கும் ரமேஷ், விடுதியின் வார்டனாகவும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், பிப்.3-ம் தேதி இரவு கோனவட்லா கிராமத்தைச் சேர்ந்த மாணவி அறையில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள், லிங்கசுகுர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல் துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் தற்கொலை வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், தங்கள் மகள் தற்கொலை செய்யவில்லை என்றும், அவள் சாவில் மர்மம் இருப்பதாக இறந்து போன மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அத்துடன் கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இந்த நிலையில், மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது இதையடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணையை மேற்கொண்டனர்.

அப்போது கல்லூரி முதல்வரும், விடுதி வார்டனுமான ரமேஷ் , சம்பந்தப்பட்ட மாணவியை தனது அறைக்கு அழைத்து அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்று அந்த மாணவியையும் மிரட்டியுள்ளார். இதனால், தனது இரண்டாம் ஆண்டு படிப்பை வேறு கல்லூரியில் படிக்க மாணவி முடிவு செய்துள்ளார்.

இதனால் சம்பவத்தன்று கல்லூரி முதல்வர் ரமேஷ், அந்த மாணவியை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அவர் வெளியே சொல்லிவிடக்கூடாது என்பதற்காக மாணவியை கொலை செய்து உடலை மாணவியின் அறைக்குக் கொண்டு சென்று தூக்கில் தொங்க விட்டு தற்கொலை போல நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில், கல்லூரி முதல்வர் ரமேஷ் தலைமறைவானார். அவரை போலீஸார் தேடி வந்த நிலையில், நேற்று இரவு பிஜாப்பூரில் கைது செய்யப்பட்டார். இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி முதல்வரே மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் ராய்ச்சூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in