கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி: காரணத்தை விசாரித்த போலீஸாருக்கு அதிர்ச்சி

கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி: காரணத்தை விசாரித்த போலீஸாருக்கு அதிர்ச்சி

அடமானம் வைக்கப்பட்ட நிலத்தை வேறு நபருக்கு கிரயம் செய்த நபர் மீது நடவடிக்கை கோரி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த கொங்கர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் (42). கொங்கர் பாளையத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான 82 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

கடந்த 2008-ம் ஆண்டு அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரின் மனைவி வாணி, புத்தூரைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கினார். அதற்காக நிலத்தின் பத்திரத்தை அந்த நபரிடம் கொடுத்து கைரேகையும் வைத்துள்ளார். ரூ. 60ஆயிரம் கடனுக்காக இதுவரை ரூ.2.94 லட்சம் வட்டியாகக் கொடுத்தபோதும், அவர் பாத்திரத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். தற்போது, அந்த நிலம் வேறொருவர் பெயரில் கிரயம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுந்தரம் தனது மனைவி பாப்பா உடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தார். அப்போது, அவர்கள் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் உடனடியாக அவர்களிடமிருந்து கேனைப் பறித்துடன் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

அப்போது, ‘எங்களிடம் நிலத்தை ஏமாற்றியவர்கள் எங்களை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். மேலும், இடத்தை வாங்கிய நபரும் தங்களிடம் மோதினால் ஊரைவிட்டு பஞ்சாயத்து மூலமாகத் தீர்மானம் போட்டு ஒதுக்கி விடுவோம் என மிரட்டுகிறார். அத்துடன் ஒரு வாரத்தில் இடத்தை காலி செய்யாவிட்டால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டல் விடுக்கின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத் தர வேண்டும்” என்றனர். தம்பதியினர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in