
தென்கொரியாவின் பிடிஎஸ் இசைக்குழுவின் அங்கத்தினர்களில் ஒருவரான சுகா தனது பிறந்தநாளினை முன்னிட்டு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பெருந்தொகை வழங்கியுள்ளார்.
தென்கொரியாவின் பிரபல இசைக்குழுவான பிடிஎஸ், உலகம் முழுக்க ரசிகர்களைக் கொண்டுள்ளது. தற்போதைக்கு தனித்தனியாக இயங்கும் முடிவை அண்மையில் இதன் அங்கத்தினர்கள் ஒரு மனதாக எடுத்திருந்தனர். இந்த நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா நாடுகளுக்கு பிடிஎஸ் குழுவின் ஏஜென்சி சார்பில் 500 மில்லியன் வான்(தென்கொரிய கரன்சி) முன்னதாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அதன் அங்கத்தினர்களும் தனித்தனியாக நன்கொடை வழங்கினர்.
இந்த வரிசையில் இன்று(மார்ச் 9) தனது 30வது பிறந்தநாளை கொண்டாடிய ராப்பர் சுகா, 100 மில்லியன் வான் தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த தொகை முழுதும் துருக்கி மற்றும் சிரியாவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான உதவிகளுக்காக செலவிடப்படும். ’சேவ் தி சில்ட்ரன்’ என்ற சேவை நிறுவனம் வாயிலாக சுகாவின் தொகை குழந்தைகளை சென்று சேர இருக்கிறது. குளிரைத் தாங்குவதற்கான அடிப்படைத் தேவைகள், பள்ளிக் குழந்தைகளுக்கான தேவைகள் ஆகியவற்றை சுகாவின் தொகை நிறைவேற்றும்.