பயனாளிகள் விருப்பத்திற்கேற்ப நிலங்களைக் கையகப்படுத்த அனுமதிப்பது பேராபத்து: உயர் நீதிமன்றம் கருத்து

பயனாளிகள் விருப்பத்திற்கேற்ப நிலங்களைக் கையகப்படுத்த அனுமதிப்பது பேராபத்து: உயர் நீதிமன்றம் கருத்து

பயனாளிகளின் விருப்பத்திற்கேற்ப நிலங்களைக் கையகப்படுத்த அனுமதிப்பது பேராபத்தை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆதிதிராவிடர்களுக்கு வீடு கட்ட நிலம் கையகப்படுத்தியதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்பாடி கிராமத்தில், ஆதிதிராவிடர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்க தமிழ்நாடு ஹரிஜன் நலத் திட்டத்துக்காக நிலம் கையகபடுத்தும் சட்டத்தின் கீழ் 2.59 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து நில உரிமையாளர்களான ரங்கராஜன் மற்றும் சகுந்தலா ரங்கராஜன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாவட்ட ஆட்சியர் உத்தரவில் தலையிட முடியாது என கூறி தள்ளுபடி செய்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் குமரேஷ்பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட இந்த நிலம் சதுப்பு நிலம் என்றும், இங்கு எந்த கட்டிடமும் கட்ட முடியாது என தெரிவித்த மனுதாரர் தரப்பு, நிலம் கையகப்படுத்தும் முன் தங்கள் தரப்பு கருத்துகளைக் கேட்கவில்லை என தெரிவித்தது. அரசு தரப்பில், தங்களுக்கு சதுப்பு நிலம் தான் வேண்டும் என பயனாளிகள் விரும்புவதாகவும், அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே நிலம் கையகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு, வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தாசில்தாரின் அறிக்கை மனுதாரர்களுக்கு வழங்காமலும், நில உரிமையாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்க அவகாசம் வழங்காமலும் நிலத்தை கையகப்படுத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், பயனாளிகளின் விருப்பத்திற்கேற்ப நிலங்களைக் கையகப்படுத்த அனுமதிப்பது பேராபத்தை ஏற்படுத்தும் என நீதிபதிகள் அச்சம் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in